காலை உணவு திட்டம் தேசிய அளவில் மட்டுமல்ல உலகளாவிய திட்டம் – அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்..!

சென்னை: காலை உணவு திட்டம் தேசிய அளவில் மட்டுமல்ல உலகளாவிய திட்டம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று, 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க பள்ளிகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவும் அதிகரித்து உள்ளது தெரியவந்தது. இந்த திட்டத்தின் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காலை உணவு திட்டம் தேசிய அளவில் மட்டுமல்ல உலகளாவிய திட்டம். காலை உணவு திட்டத்தை மற்ற மாநிலங்களில் விளம்பரம் செய்வதில் எந்த தவறும் இல்லை. ஒரு திட்டத்தின் மூலம் பயன் கிடைக்கும் என்றால் அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு செல்வதில் தவறில்லை.

காலை உணவு திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தும் வகையில் உள்ள சிறப்பான திட்டம் என தெரிவித்தார். மேலும் இவ்வாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மழைநீர் தேங்குவதை தவிர்க்க ரூ.17 கோடியில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் பகுதி தேசிய நெடுஞ்சாலை என்பதால் ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைந்து அனுமதி பெற்று வடிகால் பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.