பாதையில் குறுக்கிட்ட பள்ளத்தைத் தவிர்த்து நிலவை ஆய்வு செய்த சந்தியான்-3 பிரக்யான் ரோவர்- இஸ்ரோ வெளியிட்ட புதிய காட்சி..!

ந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சிவசக்தி புள்ளியில் இருந்து நகர்ந்து செல்வதைக் காட்டும் வீடியோவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமையன்று வெளியிட்டது.

ட்விட்டர் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டிருக்கும் இஸ்ரோ, “பிரக்யான் ரோவர் தென் துருவத்தில் சந்திர ரகசியங்களைப் பின்தொடர்வதற்காக சிவசக்தி புள்ளியைச் சுற்றித் வலம்வருகிறது!” எனக் கூறியுள்ளது.

நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ புள்ளி என அழைக்கப்படும் என்றும் சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் எனவும் பிரதமர் மோடி சனிக்கிழமை அறிவித்தார்.

பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் கட்டளை மையத்தில், சந்திரயான்-3 திட்டத்தில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளிடம் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். சந்திரயான்-3 வெற்றிக்காக உழைத்த விஞ்ஞானிகளைப் பாராட்டினார்.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் டெலிமெட்ரி டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் மிஷன் கன்ட்ரோல் வளாகத்தில் பிரதமர் மோடி விஞ்ஞானிகள் முன்னிலையில் பேசினார். அப்போது, “இதுபோன்ற மகிழ்ச்சி முழு உடலும் உள்ளமும் மகிழ்ச்சியில் திளைக்கும் மிக அரிதான சந்தர்ப்பங்களில்தான் கிடைக்கிறது” என்றார்.

சந்திரயான் 3 இன் வெற்றி உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்ட அவர், தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, தனது மனம் முழுவதும் விஞ்ஞானிகளிடம் இருந்ததாகவும் தெரிவித்தார்..