பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 3-வது நாளாக தொடரும் சாலை மறியல் போராட்டம் – 139 பேர் கைது.!!

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு நடத்தி அரசுத் துறைகளில் அனைத்து நிலைகளிலும் உள்ள ஒரு சதவீத பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, நியமன தேர்விலிருந்து விலக்கு அளித்து உடனடியாக பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் கடந்த 12-ம்தேதிமுதல் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 14-ம் தேதி கோடம்பாக்கம் மேம்பாலம் அருகிலும், 15-ம் தேதி வேப்பேரியில் சென்னை காவல்ஆணையர் அலுவலகம் அருகிலும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நியமன தேர்வு இன்றி ஆசிரியர் பணி வழங்க இயலாது எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 3-வது நாளாக நேற்றும் கிண்டி ரயில் நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சாலையிலிருந்து குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தி கைது செய்து, பின்னர் விடுவித்தனர். மொத்தம் 139 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ரூபன் முத்துகூறும்போது, “எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

இதன் தொடர்ச்சியாக சென்னைகாமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் அவர்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “அறநெறியை மீறி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கொடுமைப்படுத்துவதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களை அழைத்துப் பேசி சுமுகதீர்வுகாண வேண்டும். டிஎன்பிஎஸ்சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி,அவர்களுக்கு பணிநியமனம் வழங்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், “தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வைற்ற மாற்றுத் திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.