அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 50,000 பணியிடங்கள் நிரப்பப்படும் – முதல்வர் ஸ்டாலின் உறுதி.!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக 37 ஆயிரத்து 705 நபர்களுக்கு வரிவிதிப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு, கட்டட அனுமதி, பிறப்பு, இறப்பு பதிவுகள் போன்றவை செய்து தரப்பட்டிருக்கிறது. குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை மூலம் ஆயிரத்து 190 நபர்களுக்கு 60 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் தொழில் கடன் உதவி செய்து தரப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 659 நபர்களுக்கு 3 சக்கர வாகனம், கடன் உதவிகள், கருவிகள், அடையாள அட்டைகள் தரப்பட்டிருக்கிறது.

கூட்டுறவுத்துறை மூலமாக 6 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 766 நபர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி, முப்பதே நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு இங்கே பதிவு செய்ய விரும்புறேன். இதைவிட பெரிய வெற்றி இருக்க முடியுமா? இத்தனை லட்சம் குடும்பங்கள் இதனால் பயனடைந்து இருக்கிறார்கள். எல்லா மாவட்டங்களிலும், மேற்படி முகாம்களில் அளித்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு அந்த பயனாளிகளுக்கு அவ்வப்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைக்கும், எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் இந்த நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகளில் காணொளி வாயிலாக நானும் பங்கேற்றிருக்கிறேன். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோரிக்கைகள் இந்தச் சிறப்பு முகாம்கள் மூலமாக முடிவுற்றதை பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறது.

மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண்பதே முக்கியம் என்று நினைக்காமல் விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட்டால் தான் அரசு மேல் ஏழைகள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை வலுவடையும். அத்தகைய நம்பிக்கையை விதைக்கின்ற திட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் அமைந்திருக்கிறது. இதற்கு காரணமான அமைச்சர்களையும் அனைத்து அரசு அதிகாரிகளையும் நான் நன்றியுணர்வோடு பாராட்டுறேன், வாழ்த்துகிறேன். இந்த நிகழ்ச்சியில் மற்றுமொரு சிறப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்குப் பணி ஆணை வழங்கியிருக்கிறோம். கழகம் ஆட்சிக்கு வந்தது முதலாவே, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருகிறோம். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாகப் பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இன்றைக்கு 1,598 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. பணி நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ள இளைஞர்கள், உங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு, அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு அவர்களின் குறைகளைக் களைய முழு ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்” என்று பேசினார்.