சென்னையில் 15 லட்சம் குடும்பங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் – அமைச்சர் கே.என் நேரு பேட்டி..!

பூந்தமல்லி: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னைக்கு 225 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 580 மில்லியன் லிட்டர் வரை கூடுதலாக குடிநீர் வழங்குவதற்காக திட்டமிடப்பட்டது.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் கோயம்பேடு வரையிலான 21 கிலோமீட்டர் தூர அளவிற்கு ரூபாய் 43.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாம் பிரதான குழாய் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை எண் 4 அமைந்துள்ள பூந்தமல்லி புறவழிச் சாலையில் சாலைக்கு அடியில் 20 அடி ஆழத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் குழாய் பதிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த போது செம்பரம்பாக்கம் ஏரியில் 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது . அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக மு க ஸ்டாலின் இருந்தார். அந்த காலகட்டத்தில் குடிநீர் வழங்கல் வாரியம் மூலமாக இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அதிலிருந்து சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் தற்போது 225 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 580 மில்லியன் லிட்டராக குடிநீர் கூடுதலாக வழங்குவதற்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி சென்னை கோயம்பேடு முதல் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையம் வரை அமைக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி பகுதியில் மேம்பாலம் இருப்பதால் அந்த குழாய் அமைக்கும் பணி நேரடியாக எடுத்து வர முடியாது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த பணி நடைபெறவில்லை. புதிதாக டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் 1.7 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக புது குழாய் அமைப்பதற்காக ரூ7.7 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைவில் முடிந்து வடைந்ததுடன் சென்னைக்கு 580 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். . சென்னை மெட்ரோ வாட்டர் மூலம் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் படி சென்னையில் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கு மெட்ரோ வாட்டர் மூலம் குடிநீர் வழங்குவதற்கான திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணியும் ஒரே நேரத்தில் நடைபெறும். இந்த பணிகள் முடிவடைந்தால் சென்னையில் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். உடன் சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் செயல் உறுப்பினர் ராஜகோபால் சங்கரா மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்..