கோவை போத்தனூர் பாரத் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் இவர் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள எம். பி .ஜி .நகரில் வீடு கட்டுவதற்கு தற்காலிகமாக மின் இணைப்பு கேட்டு மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்தார் .மேலும் அரசு நிர்ணயித்த கட்டணம் 2,818 ரூபாயை ஆன்லைனில் செலுத்தினார். இந்த விண்ணப்பத்தின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு புதிதாக கட்டப்படும் வீட்டின் அருகே மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றனர். இதையடுத்து மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்ற கார்த்திகேயன் அதிகாரிகளின் அறிவுரையின்படி அரசுக்கு செலுத்த வேண்டிய மதிப்பீடு தொகை ரூ.37 ஆயிரத்து 910-ஐ செலுத்தினார்.இதையடுத்து கார்த்திகேயன் இள மின் இன்ஜினியர் சுப்பிரமணியன் என்பவரை சந்தித்து தற்காலிக மின் இணைப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தார். அப்போது அவர் மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்டுள்ளார். இதை யடுத்து கார்த்திகேயனிடம் ரூ. 7ஆயிரம் லஞ்சமாக வாங்கி வர கோரி மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை பார்க்கும் சங்கர் கணேஷ் என்பவரை சுப்ரமணியன் அனுப்பி வைத்தார். தொடர்ந்து அவரிடம் நடந்து பேச்சு வார்த்தையில் கார்த்திகேயன் ரூ. 5ஆயிரம் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார் . ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன் இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஜினியர் சுப்பிரமணியன் மற்றும் போர்மேன் சங்கர் கணேஷ் ஆகியோரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி கார்த்திகேயனிடம் ரசாயனம் தடவிய ரூ. 5 ஆயிரத்தை கொடுத்து அனுப்பிவிட்டு மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது அங்கு பொறியாளர் சுப்பிரமணியன் இல்லை. போர்மேன் சங்கர் கணேஷ் மட்டும் இருந்தார். அவரிடம் கார்த்திகேயன் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போதும் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அப்போது அங்கு வந்த இன்ஜினியர் சுப்பிரமணியத்திடம் போலீசார் விசாரித்து அவரையும் கைது செய்தனர். அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Leave a Reply