சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏ ரூபி மனோகரன் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொந்தளித்துள்ளார்.
கட்சியை வளர்க்க வேண்டும் என நினைத்த என் ஆசையில் நிறைய மண்ணை அள்ளி போட்டுவிட்டதாக கூறி அவர் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவை சாடி உள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இந்த மோதலில் 3 பேர் காயமடைந்தனர். இந்த மோதல் தமிழக காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மோதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளருமான, திருநெல்வேலி மாவட்டம் நாங்கநேரி தொகுதியி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன், எஸ்சி பிரிவு தலைவர் எம்பி ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்க நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க கூறப்பட்டு இருந்தது. ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இன்று ரூபி மனோகரன் ஆஜராகவில்லை. அவர் விலக்கு கோரி கடிதம் அனுப்பி இருந்தார். இதனை ஒழுங்கு நடவடிக்கை குழு ஏற்கவில்லை. இதையடுத்து அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் ரூபி மனோகரன் எம்எல்ஏ இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தற்போதைய இடைநீக்கத்தை எனக்கு கிடைத்த அவமரியாதையாக நினைக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்காக உழைக்கும் மக்களுக்கு கிடைத்த அவமரியாதையாக பார்க்கிறேன். திருநெல்வேலி மாவட்டத்திலும், நாங்குநேரி தொகுதியிலும் கட்சி உயிரோட்டமாக உள்ளது. கட்சி வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது பெருமையாகவும், சந்தோஷமாக இருக்கிறது. இத்தகைய சூழலில் இப்படி ஒரு முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. இது சரியான முடிவா? என்பதை கட்சி தலைமை நிச்சயம் முடிவு செய்வார்கள்.
நான் எம்எல்ஏவாகி ஒன்றரை ஆண்டுகாலம் தான் ஆகி உள்ளது. இன்னும் மூன்றரை ஆண்டுகால பதவி உள்ளது. நான் முழுக்க முழுக்க இந்த தொகுதியிலேயே இருப்பேன். தொகுதியிலேயே படுத்து தூங்கி மக்கள் பணியாற்ற உள்ளேன். தொகுதி மக்களுக்காக உயிரை கொடுப்பேன். எனக்கு நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்எல்ஏ என்ற பதவியை மக்கள் கொடுத்துள்ளனர். இதற்காக தொகுதியில் இருந்தே மக்கள் பணியாற்றுவேன். இன்று முதல் என் முழுநேரத்தை தொகுதி மக்களுக்காக ஒப்படைப்பேன்.
எந்த நடவடிக்கை எடுத்தாலும் கட்சி என்ன கூறினாலும் நான் அதற்கு கட்டுப்படுவேன். ஆனால் வருத்தம் இருக்குது. கட்சி என்னுடன் இருந்தால் இன்னும் இந்த கிராமத்தில், தொகுதியில் காங்கிரஸை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.இந்த ஆசையில் நிறைய மண்ணை அள்ளி போட்டு இருக்கிறார்கள். பரவாயில்லை. நான் மக்களுக்காக முழுமையாக பாடுபடுவேன்.
என்னை பொறுத்தவரை என்மீதான காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நடவடிக்கை தவறானது. ஏனென்றால் இங்கிருந்து சென்றவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் ஒழுங்கு நடவடிக்கை குழுவை நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. இந்த நடவடிக்கை சரியா, தவறா என்பது பற்றிய கட்சி மேலிடம் முடிவு செய்யும். தற்போதைய கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். ஏனென்றால் கட்சி என்பது எனக்கு கோவில் போன்றது. கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மிகவும் பக்குவம் வாய்ந்தவர். அவர் நல்ல முடிவை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply