திருவண்ணாமலை அருகே, மனைவி, மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளிட்ட 6 பேரை வெட்டிக் கொலை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஒரந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (40). இவருடைய மனைவி வள்ளி. இந்தத் தம்பதிக்கு திரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6), பூமிகா (4) என்ற 4 மகள்களும், தனுஷ் என்ற 4 வயது மகனும் இருந்தனர்.
இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த பழனி, மனைவி உள்ளிட்ட 5 பிள்ளைகளையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், 5 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூமிகாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் அந்த சிறுமியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத்தையே கொலை செய்து விட்டு பழனி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply