எல்லையில் சீனா அத்துமீறல்… தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர்- பாதுகாப்புத் துறை அமைச்சருடன் முப்படைத்தளபதி அவசர ஆலோசனை..!

ருணாச்சல பிரதேசத்தில் இந்திய – சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக முப்படை தளபதி அனில் சுவுகான் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வீரர்கள் தாக்கப்பட்டது குறித்து விளக்கமளித்தார். அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் ராஜ்நாத்சிங் வீட்டிலேயே இந்த ஆலோசனை நடைபெற்றது.

இதற்கிடையே, சீன எல்லையில் இந்திய வீரர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விளக்கம் அளிக்கவுள்ளார்.

இந்தியா-சீனா இடையே தொடர்ந்து எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கல்வாண் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேரும், சீன வீரர்கள் 40 பேரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, இருதரப்பு பேச்சு வார்த்தைக்குப் பிறகு அமைதி நிலவியது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் மாநிலம் தவாங் எல்லைப் பகுதியில் கடந்த 9-ம் தேதி 300-க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். அப்போது, இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் காயம் ஏற்பட்டது. குறிப்பாக இந்திய ராணுவத்தினரை விட சீன ராணுவத்தினரே அதிகளவு காயமடைந்ததாக தகவல் வெளியானது. இதனிடையே எல்லை மோதல் தொடர்பா விவாதம் நடத்தக் கோரி, சிவசேனா மற்றும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.