தமிழ்நாட்டின் காலை உணவு திட்டம்… தெலங்கானா அதிகாரிகள் குழு ஆய்வு..!

அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் குறித்து தமிழ்நாடு வந்துள்ள தெலங்கானா அதிகாரிகள் குழுவினர் கேட்டறிந்தனர்.

அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல்இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழ்நாடு அரசால் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

திருக்குவனையில் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன். தற்போது அதை அனைத்து பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்துள்ளோம். சுமார் 17 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என்றார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் குறித்து அறிந்துகொள்வதற்காக தெலங்கானா அதிகாரிகள் குழு சென்னை வந்துள்ளது.தெலங்கானா முதலமைச்சரின் தனிச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்துள்ளனர். சென்னை ராயபுரம் அரசுப்பள்ளி உணவுக் கூடத்தில், காலை உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, என்னென்ன உணவுகள் தயாரிக்கப்படுகின்றன, எவ்வாறு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது என்பதை கேட்டறிந்தனர்.

காலை உணவுத் திட்ட சிறப்பு அதிகாரியான இளம்பகவத், காலை உணவுத் திட்டம் குறித்து தெலங்கானா அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்..