திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் பாஜகவில் இணைகிறாரா..?

காங்கிரஸில் இருந்து ஏற்கனவே விலவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணியை தொடர்ந்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசியல் கட்சி நிர்வாகிகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவும் சூழ்நிலையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பாக காங்கிரஸ்(Congress) கட்சியை சேர்ந்த அதன் முக்கிய தலைவர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் உள்ளிட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்வது தொடர்கதையாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் மாநில முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும் கன்னியாகுமரி மாவட்ட விலவங்கொடு சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏ விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது தமிழக காங்கிரஸ் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லி சென்ற விஜயதாரணி மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இவரைத் தொடர்ந்து திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பி திருநாவுக்கரசரும் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது மீண்டும் திருச்சி தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வருகிறார். எனினும் கட்சி நிர்வாகிகள் இவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் திருநாவுக்கரசருக்கு இந்த முறை எம்பி சீட் கொடுக்கக் கூடாது எனக் கூறி காங்கிரஸ் கட்சியினரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.