கலை, ஆன்மீகத்தின் தலைநகரம் தமிழகம்… நம் நாட்டில் மிகவும் அழகானவை வடகிழக்கு மாநிலங்கள்… ஆளுநர் ஆர்.என்.ரவி..!

சென்னை: தமிழகம் கலை மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் இந்தியாவின் தலைநகரமாக விளங்குகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இந்தியாவின் அழகு என்பது வேற்றுமையில் ஒருமைப்பாடு காண்பதுதான், அதிலும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வேற்றுமை மிகவும் அழகானது. வாய்ப்பு கிடைக்கும்போது தமிழக மக்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ள வேண்டுமென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள பவன் ராஜாஜி வித்யாஷரம் பள்ளி வளாகத்தில், சென்னை-தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில், ‘ஆக்டேவ்’ என்ற, வடகிழக்கு மாநிலக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் கைவினைப் பொருட்காட்சியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.

வடகிழக்கு மாநிலங்களை, சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட, கிராமியக் கலைஞர்களின் கலை விழா, கைவினைப் பொருட்காட்சி ,உணவுத் திருவிழா திங்கட்கிழமை முதல் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சி தினமும் மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் உள்ளே வர அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம், அசாம், நாகலாந்து, மிசோரம், மணிப்பூர், சிக்கிம், மேகாலயா, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்களின் பாரம்பரிய கலாச்சார நடனங்கள் அரங்கேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் தமிழகத்தின் பாரம்பரியங்களை தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு என்று கூறினார்.

தமிழகம் கலை மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் இந்தியாவின் தலைநகரமாக விளங்குகிறது. இந்தியாவின் அழகு என்பது வேற்றுமையில் ஒருமைப்பாடு காண்பதுதான், அதிலும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வேற்றுமை மிகவும் அழகானது. அதனை சென்னை மக்கள் அடுத்த மூன்று நாட்களில் தெரிந்துகொள்ளலாம். எனவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்களை வரவேற்கிறேன் என்றார்.

வடகிழக்கு மாநிலங்களின் உணவையும் மக்கள் சாப்பிட வேண்டும்,மிகவும் சுவையானது. இந்த உணவின் மூலம் அவர்களின் உணர்வுகளை தெரிந்துகொள்ளலாம். வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் அழகானது, இந்தியாவின் 4 சதவீத மக்கள் அங்கு வாழ்கின்றனர். நில பரப்பில் 8 சதவிகிதம் உள்ளது. வாய்ப்புள்ள நேரத்தில் இங்குள்ள மக்களையும், அந்த பகுதியையும் சென்று பார்க்க வேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சியின் அடையாளமாக வடகிழக்கு மாநிலங்கள் தற்போது மிக பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள்,புதிய உணவு விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள் என வளர்ச்சி அடைந்து வருகிறது.

60 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்கள் என்றால் அங்கு கலவரம் நடைபெறும் ஆபத்தான இடம் என அனைவரும் கூறி வந்தோம். அங்கு பிரச்சினைகள் இருந்தது உண்மைதான். ஆனால் அதற்கு காரணம் அங்குள்ள மக்களை நாம் புரிந்துகொள்ளாமல், ஆங்கிலேயர்கள் எப்படி அவர்களை பார்த்தனரோ அதேபோல நாம் பார்த்தது தான் தவறு. இந்தியா என்பது பல ஆண்டுகளாக வளர்ந்து வந்த கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் வெளிப்பாடு எனவும் ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்தார்.