12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் – வெளியான முழு விவரம் இதோ.!!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், இந்தாண்டு 32 ஆயிரத்து 501 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்..

பொது தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.. தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி..

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கியது. இந்த கல்வியாண்டில் 8.17 லட்சம் மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி உள்ளனர். கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை வரை நடைபெற்ற தேர்வு தாள்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை திருத்தப்பட்டன. இந்த தேர்வின் முடிவுகளை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை 9:30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் குறித்த நேரத்தில் முடிவுகள் வெளிவர தாமதமான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகம் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், இந்தாண்டு 32 ஆயிரத்து 501 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ள தகவல்களும் வெளியிடப்பட்டது. அதில், தமிழ் பாடத்தில் 2 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், ஆங்கிலத்தில் 15 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதேபோல், இயற்பியலில் 812 பேரும், வேதியியலில் 3 ஆயிரத்து 909 பேரும், உயிரியலில் ஆயிரத்து 494 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

அதேபோல், கணிதத்தில் 690 பேர், தாவரவியலில் 340 பேர், விலங்கியலில் 154 பேர், கணினி அறிவியலில் 4 ஆயிரத்து 618 பேர் முழு 100 மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். வணிகவியலில் 5 ஆயிரத்து 678 பேரும், கணக்கு பதிவியலில் 6 ஆயிரத்து 573 பேரும் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதேபோல், பொருளியலில் ஆயிரத்து 760 பேரும், கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவுல் 4 ஆயிரத்து 51 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியல் பாடத்தில் ஆயிரத்து 334 பேரும் 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர்.