பொய் சொல்லுவதற்காகவே பிறந்தவர் தான் ஸ்டாலின்- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்..!

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி விட்டதாக, பொய் சொல்லுவதற்காகவே பிறந்தவர் தான் ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு கழகத்தின் சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செய்தனர். இந்நிகழ்வில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக முன்னாள் எம்.பி.கள் வெங்கடேஷ் பாபு, ஜெயவர்தன், எஸ்.ஆர்.விஜயகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா, முக்கூர் சுப்பிரமணி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், வடசென்னை வடக்கு(கிழக்கு) மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, செந்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், உழைப்பவர்களுக்காகவும் உயர்வு கிடைக்க பாடுபட்டவர் ராமசாமி படையாட்சியார். அவர்களுக்காக அம்மா ஆட்சியில் மணிமண்டபம் கட்டப்பட்டது.

பொய் சொல்வது தமிழ் பண்பாடு இல்லை. மிகப்பெரிய பொறுப்பில் உள்ள முதலமைச்சர் வாய்கூசாமல் பொய் சொல்கிறார். பொய் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அவர் பொய் சொன்னதை நினைத்து உலகமே சிரிக்கிறது. திமுக 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து அதில் சிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு நாங்கள் 100%, நிறைவேற்றி விட்டோம் என்று பொய் கூறிவருகிறார். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் என்ற பாடலில் வருவது போல் பொய்யிற்க்கான பட்டத்தை தமிழக முதல்வருக்கு கொடுக்கலாம்.

கல்வி கடன் ரத்து, கல்வியை மாநில பட்டியலில் சேர்ப்பது, ஈழத் தமிழருக்கு குடியுரிமை, கட்சத்தீவு மீட்பு, அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம், ஆண்டிற்கு பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மலையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம் குடிப்பதை போல் பொய் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 10% கூட நிறைவேற்றவில்லை.

மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை திமுக எம்.பி.கலாநிதி, வீராசாமி ஆக்கிரமித்துள்ளதை ஒரு மாதத்திற்குள் அகற்ற நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. அவருடைய தந்தை மிகப்பெரும் செல்வந்தராக இருந்தும் இவர் இப்படி நிலத்தை ஆக்கிரமித்து இருப்பது சட்டத்திற்கு முன் தப்பிக்க முடியாது என காட்டுகிறது.

செந்தில்பாலாஜி உள்ளிட்ட பல்வேறு திமுக அமைச்சர்கள் பலர் ஏற்கனவே செய்த பல்வேறு குற்றத்திற்காக கீழமை நீதிமன்றம் குடுத்த தண்டனையிலிருந்து ஆட்சியை கையில் வைத்து கொண்டு நிரபராதி என்று சொன்னாலும், தற்போது உயர்நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்ட அமைச்சர்களின் வழக்குகளை கையில் எடுத்து விசாரிக்கிறது. இது சட்டத்தின் முன் குற்றம் செய்த யாரும் தப்பிக்க முடியாது என்பதை உணர்த்துகிறது.

டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிவருவதை தடுக்காமல், மாரத்தான் தான் முக்கியம் என்று எண்ணிக்கொண்டு ஓட்டத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மக்கள் பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர். இதனால் மக்களின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தொடர்ந்து இந்த நிலைமை நீடிக்குமேயானால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அரசை ஓட விடுவதற்கு மக்கள் தயாரக இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றார்.