கார்ப்பரேட்களின் கஜானாவை நிரப்பவும் நந்தினி, அமுல் விற்பனையை அதிகரிக்கவும் தான் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது- பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.!

கார்ப்பரேட்களின் கஜானாவை நிரப்பவும், நந்தினி, அமுல் விற்பனையை அதிகரிக்கவும் தான் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு..

தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்.

தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் நெய் விற்பனை விலையை கடந்த 18மாதங்களில் நான்காவது முறையாகவும், வெண்ணெய் விற்பனை விலையை கடந்த 9 மாதங்களில் இரண்டாவது முறையாகவும் கடந்த செப்டம்பர் 14ம் உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது ஏழை, எளிய, நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும் என்பதால் அந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு முதன் முதலாக கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

ஆவின் உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் நெய்யில் சுமார் 75%க்கும் மேல் விற்பனையாவது 100மிலி, 200மிலி, 500மிலி ஜார் மற்றும் 500மிலி டெட்ரா பாக்கெட் தான், 1லிட்டர் ஜார் பெரும்பாலும் மேல்தட்டு வர்க்கத்தினரும், 5கிலோ, 15கிலோ டின் வணிக பயன்பாட்டிற்கும் பயன்படுத்தும் நிலையில் 100மிலி ஜாருக்கு 10.00ரூபாயும், 200மிலி ஜாருக்கு 20.00ரூபாயும் , 500மிலி ஜார் மற்றும் டெட்ரா பாக்கெட்டிற்கு 50.00ரூபாயும் என லிட்டருக்கு 100.00ரூபாய் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்ட விலை உயர்வானது நெய், வெண்ணெய் பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்களையே வெகுவாக பாதிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஏனெனில் இந்த விலை உயர்வு மூலம் ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரும் பண முதலைகள் நடத்தும் மொத்த விநியோக நிறுவனங்களும் பலன் பெறக் கூடிய வகையில் ஒரு லிட்டர் நெய்க்கு 95.00ரூபாயும், வெண்ணெய் ஒரு கிலோவிற்கு 76.00ரூபாயும் விற்பனைக்கான கமிஷன் தொகையாக (அதுவே பால் முகவர்கள், சில்லரை வணிகர்கள் என இருதரப்பினருக்கான கமிஷன் தொகையாக நெய்க்கு 52.00ரூபாய், வெண்ணைக்கு 42.00ரூபாய் மட்டுமே) நிர்ணயம் செய்து விட்டு, அதன் பலனை சாமானிய நுகர்வோர் தலையில் விலை உயர்வு எனும் பெரும் பாரமாக சுமத்துவது தான் பால் உற்பத்தியாளர்களின் நலனைப் பேணுவதா..? என்பதை மனச்சாட்சி உள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

இந்த நிலையில் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் நெய், வெண்ணெய் விலை உயர்வை நியாயப்படுத்தும் வகையில் அரசு சார்பில் நிர்வாக இயக்குனர் திரு. வினித் ஐஏஎஸ் அவர்கள் 14ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையானது 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாகவும், உண்மையை மூடி மறைக்கும் செயலாகவும் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

ஏனெனில் “பண்டிகை காலங்களில் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட ஒன்றியங்களில் உள்ள ஆலைகளின் திறன் மேம்படுத்தப்பட்டு, நெய் மற்றும் வெண்ணெய் உற்பத்தியையும், ஆவின் நெய்யின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளது உண்மை என்றால் நெய், வெண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தமிழகம் முழுவதும் தினசரி பால் கொள்முதலின் அளவு சுமார் 38லட்சம் லிட்டருக்கும் மேல் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டுமே தவிர தினசரி பால் கொள்முதலின் அளவை சுமார் 27லட்சம் லிட்டராக குறைய விட்டிருக்கக் கூடாது,

அப்போது தான் தினசரி பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கான உற்பத்தி போக உபரியாகும் பாலில் இருந்து கொழுப்பு சத்தை சேகரித்து, வெண்ணையும், வெண்ணையில் இருந்து நெய்யும் உற்பத்தி செய்து தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய முடியும். ஆனால் தற்போதோ தினசரி வெறும் 27லட்சம் லிட்டர் மட்டுமே பால் கொள்முதல் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஓராண்டுக்கும் முன்பிருந்து தற்போது வரை வெண்ணெய், நெய் உற்பத்தி என்பது ஆவினில் முழுமையாக முடங்கிப் போய், தமிழகம் முழுவதும் அதன் விற்பனை என்பது எட்டாக்கனியாகிப் போனது, அதுமட்டுமின்றி மகராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து மார்க்கெட் விலையை விட ஒரு கிலோவுக்கு 60.00ரூபாய் வரை அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படும் வெண்ணையில் இருந்து பெயரளவிற்கு நெய் உற்பத்தி செய்வதால் ஆவினுக்கு அதிகளவு வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கவே இந்த விலை உயர்வை ஆவின் நிர்வாகம் அமுல்படுத்தியிருப்பதோடு, அதனை மறைக்க இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

மேலும் “இந்திய அளவில் தற்போது பால் மூலப்பொருட்களின் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்தவாறு இருப்பதாலும், உற்பத்தி செலவுகள் அதிகரித்த காரணத்தாலும் நெய், வெண்ணெய் வகைகளின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஆவினுக்கு ஏற்பட்டுள்ளது” என நிர்வாக இயக்குனர் திரு. வினித் ஐஏஎஸ் அவர்கள் கூறுவது “ஒரு பானை சோற்றில் ஒரு முழுப் பூசணிக்காயை அல்ல உலகையே மறைக்கப் பார்ப்பது போல் இருக்கிறது.”

ஏனெனில் இந்திய அளவில் தற்போது பால் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் வடமாநிலங்களில் வெண்ணெய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதோடு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் தொடரும் போது மூலப்பொருட்களின் விலை ஒரே சீரான நிலையில் தொடர்ந்து வருகிறதே தவிர உயரவில்லை என்பது தான் உண்மை.

மேலும் “பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சந்தையில் உள்ள பிற நிறுவனங்களின் நெய், வெண்ணெய் வகைகளின் விலையை விட ஆவின் நெய், வெண்ணெய் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனவே பொதுமக்கள் அனைவரும் 4.5லட்சம் தமிழக பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்வதாக ஆவின் நெய், வெண்ணெய் விற்பனை விலை உயர்வுக்கான காரணமாக நிர்வாக இயக்குனர் திரு. வினித் ஐஏஎஸ் அவர்கள் கூறுவது 100% கடைந்தெடுத்த பொய்யாகும்.

தமிழகத்தின் வெளிச்சந்தையில் அண்டை மாநில கூட்டுறவு நிறுவனங்களான அமுல் 650.00ரூபாய்க்கும், நந்தினி 610.00ரூபாய்க்கும் அங்கிருந்து உற்பத்தி செய்து தமிழகத்தில் கொண்டு வந்து நெய் விற்பனை செய்யும் போது, தமிழகத்திலேயே பால் கொள்முதல் செய்து, வெண்ணெய், நெய் உற்பத்தி செய்யும் அரசு கூட்டுறவு நிறுவனமான ஆவின் சாதாரண வகை நெய் ஒரு லிட்டர் 700.00 ரூபாய், பிரிமியம் வகை நெய் 760.00 ரூபாய் என அந்நிறுவனங்களை விட அதிக விலை நிர்ணயம் செய்திருப்பதும், தற்போது ஒரு சில தனியார் பால் நிறுவனங்களை விட பெரும்பாலான நிறுவனங்கள் 720.00ரூபாய் முதல் நெய் விற்பனை விலையாக நிர்ணயம் செய்திருக்கும் போது ஆவின் பிரிமியம் நெய் ஒரு லிட்டர் 760.00ரூபாயாக நிர்ணயம் செய்திருப்பதும் அதிகாரிகளின் ஊழல், முறைகேடுகளை ஊக்குவித்து, அவர்களின் கஜானாவை நிரப்புவதற்குத் தானே தவிர பால் உற்பத்தியாளர்களின் நலனையோ, பொதுமக்கள் மீது கொண்ட அக்கறையோ கிஞ்சித்தும் கிடையாது என்பதும் உண்மை தான்.

மேலும் ஆவின் நெய் விலை உயர்வு தொடர்பான விளக்க அறிக்கையில் தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டர் நெய் 720.00ரூபாய் முதல் 920.00ரூபாய் வரை விற்பனை செய்வதாக நிர்வாக இயக்குனர் திரு. வினித் ஐஏஎஸ் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், செப்டம்பர் 15ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் தனியார் பால் நிறுவனங்கள் 960.00ரூபாய் முதல் 1000.00ம் ரூபாய் வரை நெய் விற்பனை செய்வதாக, இருவரும் முரண்பாடான தகவல்களை கூறுவதில் இருந்தே அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் இணக்கமான சூழல் இல்லை என்பதும், ஆவின் நெய் விற்பனை விலை உயர்வு விவகாரம் அமைச்சரோடு கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

அதுமட்டுமின்றி ஆவின் நெய், வெண்ணையின் தற்போதைய விற்பனை விலையானது தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாகவும், அண்டை மாநில கூட்டுறவு நிறுவனங்களை விட அதிகமாகவும் விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதை நிர்வாக இயக்குனர் திரு. வினித் ஐஏஎஸ் அவர்களின் நெய், வெண்ணெய் விலை ஒப்பீட்டு அறிக்கை உறுதி செய்வதோடு, ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் டேங்கர் லாரிகளை இயக்கும் சகோதரர்கள் அமுல் மற்றும் நந்தினி நிறுவனங்களின் வெண்ணெய், நெய்யை தமிழ்நாட்டில் விற்பனை செய்யும் மொத்த விற்பனையாளர்களாக இருப்பதால், ஆவினை விட அமுல், நந்தினி விற்பனையை அதிகரித்து அவர்களிடமிருந்து ஆதாயம் அடைய நினைக்கும் அதிகாரிகள் அந்த நபரின் விற்பனை வருவாயை உயர்த்துவதற்காகத் தான் தற்போது ஆவின் நெய், வெண்ணெய் விலையை உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்டதோ..? என ஆவின் ஊழியர்கள் மத்தியிலேயே சந்தேகம் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே கடந்த பத்து ஆண்டுகளில் இதுவரை ஆவின் வெண்ணெய், நெய் நுகர்வோர் பேக்கில் (100மிலி, 200மிலி, 500மிலி மற்றும் 1லிட்டர்) விற்பனை செய்யப்பட்ட அளவு (சராசரி விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு), அதே போன்று மொத்தமாக (Bulk Sales) விற்பனை செய்யப்பட்ட அளவு (சராசரி விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு) எவ்வளவு என்பதையும், 2011மே மாதம் முதல் 2021மே மாதம் வரையிலும், 2021ஜூன் மாதம் முதல் 2023ஆகஸ்ட் மாதம் வரையிலும் ஆவினில் பாலில் இருந்து கொழுப்பு சத்து சேகரித்து, வெண்ணெய், நெய் உற்பத்தி செய்து விற்பனை செய்தது எவ்வளவு..?, மகராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வெண்ணெய் கொள்முதல் செய்து அதன் மூலம் வெண்ணெய், நெய் உற்பத்தி செய்து விற்பனை செய்தது எவ்வளவு..? என்பதை ஆவின் நிர்வாகத்தில் இருந்து தமிழக அரசு அறிக்கையாக கேட்டுப் பெற்று, அதனை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்துகிறது.

ஏனெனில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் இருந்து ஆவினில் இருந்து தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் தகவல்களை வழங்கிட கோரி விண்ணப்பித்தால் கேரளாவின் கூட்டுறவு வங்கியில் தனிநபர் கணக்கு விபரங்களை கேட்ட வழக்கில் (“Manu/SC/1020/2013 Thalapallam Ser. Co.op Bank Ltd and Ors. Vs. State of Kerala and Ors.”) தகவல்களை கொடுக்கத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி உரிய தகவல்களை தர மறுக்கிறது ஆவின் நிர்வாகம். காரணம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் விபரங்களை வழங்கினால் ஆவினில் நடைபெற்று வரும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடுகள் வெளியே வந்து விடும், ஊழல் அதிகாரிகளின் முகத்திரை கிழிக்கப்படும், அதனால் ஊழல் அதிகாரிகளால் சம்பாதிக்க முடியாது என்பதால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய தகவல்களை ஆவின் நிர்வாகம் தர மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.