தமிழக காவல்துறையினர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்- கோவையில் மாஜி அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேச்சு..!

கோவை: ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை தருவதாக கூறிய திமுக தற்போது 27 மாதங்களுக்குப் பிறகு அதனை வழங்குவதால் ஒவ்வொரு மகளிரின் வங்கி கணக்கிலும் 27 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக தலைமை கழக பேச்சாளரும் பிரபல திரைப்பட இயக்குனருமான ஆர். வி . உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,

அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவைக்கு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் எந்த ஒரு மக்கள் நல திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முறையாக செயல்படுத்தியிருந்தால் 2 கோடியே 30 லட்சம் மகளிருக்கு இந்த நிதி வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் பல்வேறு விதிமுறைகளை விதித்து தற்போது ஒரு கோடி பேருக்கு மட்டுமே வழங்கியுள்ளனர். ஆட்சிக்கு வந்த உடன் தருவதாக கூறிய முதலமைச்சர் ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகிய பிறகு இத்திட்டத்தை கொண்டு வந்ததால் ஒவ்வொருவருக்கும் 27 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

கோவை குனியமுத்தூர் காவல் சரக உதவி ஆணையர் ரகுபதிராஜா திமுக நிர்வாகியை போல் செயல்படுகிறார். அவர் காக்கி சீருடையை கலைந்து கரை வேட்டி கட்டி கொள்ளட்டும். வெட்கமில்லாமல் திமுக விற்கு அடிபணிந்து கிடக்கிறார். அதிமுக கொடி கட்ட அனுமதிக்காத அவர் திமுக அமைச்சர் வந்தபோது கொடி தோரணம் பிளக்ஸ் பேனர் போன்றவற்றிற்கு அனுமதியளித்தார்.

கோவையில் தான் அதிக செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. காவல்துறைக்கு அதிமுக தான் பாதுகாப்பு அளித்த்து. விரைவில் ஆட்சி மாறும் அப்போது காட்சியும் மாறும் என்பதால் காவல்துறை நடுநிலையாக செயல்பட வேண்டும்.

போகிற போக்கை பார்த்தால் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வந்துவிடும் என தோன்றுகிறது. எப்போது தேர்தல் வந்தாலும் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார் என்று எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்தார்.