மீண்டும் போராட்ட களமாக மாறும் இலங்கை..!!

கொழும்பு நகரில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு போராட்டங்களால் மீண்டும் போராட்டக் களமாக மாறுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்பாட்டம் நேற்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு முன்பாக நடைபெற்றது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை கொழும்பு நகரசபை மண்டபம் பகுதியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதானால் மிகப்பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் அடக்குமுறைச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு எந்த திட்டத்தையும் செய்யாமல் மக்கள் மீது வரியை சுமத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்

விவசாயிகளுக்கு உரம், மீனவர்களுக்கு எண்ணெய், மாணவர்களுக்கு படிக்கும் வசதி, மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் போன்றவற்றை வழங்காத அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக கூறப்பட்டது. மாணவர் சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள், மீனவர் சங்கங்கள், தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள் இணைந்து இன்று பிற்பகல் கொழும்பில் இந்த மாபெரும் கண்டனப் பேரணியை நடாத்தியுள்ளார்கள்.