தென்மண்டல கவுன்சில் கூட்டம்: பினராயி விஜயனுக்கு ‘திராவிட மாடல்’ புத்தகம் பரிசளித்தார் முதல்வர் ஸ்டாலின்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, திருவனந்தபுரம் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது அவருக்கு’திராவிட மாடல்’ புத்தகத்தை ஸ்டாலின் வழங்கினார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 3) தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 2) திருவனந்தபுரம் சென்றுள்ளார். திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கோவளத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை, மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது, அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கையைக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், ‘The Dravidian Model’ என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

இதையடுத்து, திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.