கோவை காந்திபுரத்தில் ரோட்டை கடந்து செல்வதற்கு பொதுமக்களே இயக்கும் “ஸ்மார்ட் சிக்னல்” தொடக்கம்..!

கோவை காந்திபுரத்தில் உள்ள நகர பஸ் நிலையம் முன்பாக ஆயிரக்கணக்கானோர் தினமும் சாலையை கடந்து செல்கின்றனர். இந்த நிலையில் தன்னார்வமைப்பு சார்பில் ரூ 4 லட்சம் செலவில் பாதசாரிகளான பொதுமக்களே பொத்தானை அழுத்தி இயக்கும் வகையில் “ஸ்மார்ட் சிக்னல்” அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று இரவு நடந்தது. இதில் கோவை மாநகர் போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் மதிவாணன் கலந்து கொண்டு சிக்னலை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காந்திபுரம் பஸ் நிலையம் அதிகளவில் பாதசாரிகள் சாலையை கடக்கும் பகுதியாகும். எனவே இங்கு ” ஸ்மார்ட் சிக்னல்” அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொத்தானை அழுத்தி சிக்னலை முழுக்க முழுக்க பொதுமக்களே இயக்கிக் கொள்ளலாம். 120 வினாடிகள் இடைவெளியில் பொதுமக்கள் சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள பொத்தானை அழுத்தி பச்சை விளக்கு எரிய வைத்து சாலையை கடக்கலாம் .இதே போல் மாநகரில் அதிக அளவில் பாதுசாரிகள் சாலையை கடக்கும் பகுதிகளை ஆய்வு செய்து வருகிறோம் .அங்கு “ஸ்மார்ட் சிக்னல்” அமைக்க முடிவு செய்துள்ளோம். கோவை மாநகரில் சிக்னல் இல்லாமல் போக்குவரத்து நடைமுறையை அமுல்படுத்திய பிறகு சாலை விபத்து வெகுவாக குறைந்துள்ளது. மேலும் நகரில் எங்கெல்லாம் சிக்னல் இல்லாமல் போக்குவரத்து நெரிசல் உள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.இருசக்கர வாகனங்களில் பின்னால் இருந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் கோவையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் வாரம் முதல் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்..