சீக்கிய தலைவரின் கொலை… இந்தியா – கனடா உறவில் விரிசல்: முக்கிய தலைவர்கள் கருத்து..!

சென்னை: சீக்கிய தலைவரின் கொலையை தொடர்ந்து இந்தியா – கனடா நாடுகளின் உறவில் ஏற்பட்டு இருக்கும் விரிசல் தொடர்பாக பன்னாட்டு ஊடகங்கள், முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியா – கனடா மோதல் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள இந்திய நிதித்துறை மூத்த அதிகாரி ஒருவர், “கனடாவை சேர்ந்த சீக்கிய அமைப்பின் தலைவர் கொலை, இந்தியாவில் கனடாவின் முதலீடுகளை பாதிக்காது. அரசியல், வெளியுறவு கொள்கைகளை கடந்து மேற்கு உலக நாடுகள் இந்தியாவில் முதலீடுகளை செய்கின்றன. இதற்கு ஒரு முக்கிய உதாரணம் சீனா. இந்தியாவில் கனடாவின் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட முதலீடுகள் மிகவும் சிறியவை. அதனால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படாது.” என்றார்.

கனடாவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் சமீர் கௌசல் தெரிவிக்கையில், “காலிஸ்தானி தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது நம்பத்தகுந்த தகவல். ஆனால், அதை முழுமையாக தெளிவுபடுத்த வேண்டும். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது கட்சி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது என்று பார்க்க வேண்டும்.” என்றார்.

தங்கள் நாட்டில் சீக்கிய பிரிவிணைவாத தலைவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் தலையீடு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த பரபரப்பு குற்றச்சாட்டின் காரணமாக இருநாட்டின் நல்லுறவிற்கு பிரச்சனை ஏற்பட்டு இருக்கும் நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள பிரிட்டன் தொழிலாளர் கட்சி எம்பி தன்மன்ஜீத் சிங், “இந்த விவகாரத்தில் கோபமும், அச்சமும் கொண்ட சீக்கியர்கள் பலர் என்னை தொடர்பு கொண்டார்கள். இது பற்றி பலர் கவலை அடைந்து உள்ளனர்.” என்றார்.

இதுகுறித்து சீக்கிய தலைவரும், அனைத்து இந்திய பயங்கரவாத தடுப்பு முன்னணி அமைப்பின் தலைவருமான எம்.எஸ்.பிட்டா , “இந்தியாவை பிளவுபடுத்தும் எந்த நடவடிக்கைகளையும் சகித்துக்கொள்ள முடியாது. தனி காலிஸ்தான் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. எங்கள் சமூகத்தை தவறாக காட்ட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தனி காலிஸ்தான் கோரிக்கையை முறியடிக்க அனைத்து குருத்வாராக்களிலும் கூட்டம் கூட்டி பேச வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

இந்தியா, கனடா மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளின் ஊடங்களிலும் இது முக்கிய செய்தியாக மாறி இருக்கிறது. பிபிசி தொலைக்காட்சி, அமெரிக்க ஊடகமான தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், டைம்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு ஊடகங்கள் இந்தியா – கனடா உறவில் ஏற்பட்டு இருக்கும் சிக்கல் தொடர்பாக செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.