இந்தியாவில் ஃபேஸ்புக்-க்கு தடை விதிக்கனுமா..? சவுதி விவகாரத்தில் கர்நாடகா நீதிமன்றம் கடும் எச்சரிக்கை.!

பெங்களூர்: சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஒத்துழைப்பு தர மறுப்பதால் இந்தியாவில் ஃபேஸ்புக்-க்கு தடை விதிக்க நேரிடும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்தவர் சைலேஷ்குமார் (வயது 52). சவுதி அரேபியாவில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். 2019-ம் ஆண்டு மத்திய அரசின் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை ஆதரித்து ஃபேஸ்புக் பக்கங்களில் சைலேஷ்குமார் பதிவிட்டிருந்தார். அதேநேரத்தில் சவுதி மன்னர் மற்றும் இஸ்லாம் மதத்துக்கு எதிராக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாக சைலேஷ்குமார் அந்நாட்டு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மங்களூர் போலீசில் சைலேஷ்குமாரின் மனைவி கவிதா ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், கணவர் சைலேஷ்குமார், சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாகத்தான் பதிவிட்டிருந்தார். ஆனால் அவரது பெயரில் போலி அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு இஸ்லாம் மதம் மற்றும் சவுதி அரசருக்கு எதிரான கருத்துகள் பதிவிடப்பட்டதாகவும் கூறியிருந்தார். இதனடிப்படையில் மங்களூர் போலீசார் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் விவரங்களைக் கேட்டிருந்தனர். இருப்பினும் ஃபேஸ்புக் நிர்வாகம் இவ்விவகாரத்தில் ஒத்துழைப்பு தரவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக சைலேஷ்குமார் மனைவி கவிதா தரப்பில் 2021-ல் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. மேலும் கணவரை மீட்டுத் தர வேண்டும் என மத்திய அரசுக்கும் கவிதா கடிதம் அனுப்பி இருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, கணவர் சைலேஷ்குமார் பெயரில் போலி அக்கவுண்ட் யாரால் உருவாக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை ஃபேஸ்புக் நிர்வாகம் தெரிவிக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. மங்களூர் போலீஸ் விசாரணைக்கு ஃபேஸ்புக் நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை என மீண்டும் தெரிவிக்கப்பட்டது. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.தீக்‌ஷித் தலைமையிலான் பெஞ்ச் இவ்வழக்கு விசாரணையின் போது, மாநில போலீசாரின் விசாரணைக்கு ஃபேஸ்புக் நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படி தராவிட்டால் இந்தியாவில் ஃபேஸ்புக் செயல்பாடுகளுக்கு தடை விதிக்க நேரிடும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்ததனர் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகள்.