கோவை மார்க்கெட்டில் உள்ள கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் தீடீர் சோதனை – 28 மின்னணு தராசுகள் பறிமுதல்..!

கோவை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவின் பேரில், சென்னை சட்ட முறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி அறிவுறுத்தலின்படி கோவை கூடுதல் தொழிலாளர் துறை ஆணையாளர் குமரன் வழிகாட்டுதலின்படி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுரையின் பேரில் கோவை தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கோவை பூ மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள பூ, பழம் மற்றும் காய்கறி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 28 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது,
இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும். வணிகர்கள் முத்திரையிடாமல் பயன்படுத்தி வைத்துள்ள எடையளவுகளை சம்பந்தப்பட்ட முத்திரை ஆய்வாளர் அலுவலகங்களுக்கு சென்று முத்திரையிட்டு கொள்ள வேண்டும். பயன்படுத்த முடியாத எடையளவுகளை மாற்றி புதிய எடையளவுகளை பயன்படுத்த வேண்டும். மேலும் எடையளவுகளை உரிய காலத்தில் மறு முத்திரையிட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றனர்.