கோவையில் தீவிர ஹெல்மெட் வேட்டை- 618 பேர் மீது வழக்கு..!

கோவையில் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது போலீஸ் கமிஷனருக்கு தெரிய வந்தது. இதனால் விபத்துக்கள் அதிகமாக ஏற்பட்டது. இதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.ஹெல்மெட் அணியாமல் யார் வாகனம் ஓட்டினாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து போலீசார் கோவை அவிநாசி ரோடு, உக்கடம், திருச்சி ரோடு, கணபதி, உள்ளிட்ட 10 இடங்களில் தொடர்ந்து சிறப்பு வாகன சோதனை நடத்தினார்கள். கோவை மாநகர் பகுதியில் நேற்று போலீசார் நடத்திய சிறப்பு வாகன தணிக்கையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 618 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 310 பேர் எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 1899 இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அந்தந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில் தன்னார்வ அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக சிறுவர்கள் போக்குவரத்து பூங்காவில் உள்ள பயிற்சி மையத்தின் மூலமும் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது.மேலும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்த 971 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு, தொடர்ந்து வாகனங்கள் இயக்கும்போது பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது . தொடர்ந்து ஹெல்மெட் சோதனை நடந்து வருகிறது.