கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பு பயிற்சி மற்றும் கைத்துப்பாக்கி வழங்க வேண்டும்- முதல்வருக்கு வி.ஏ.ஓ. சங்கம் கோரிக்கை..!

சென்னை: அச்சுறுத்தல் இருப்பதால் கிராமநிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பு பயிற்சியும், தேவைப்பட்டால் கைத்துப்பாக்கியும் வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு, கிராம நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடியில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கியதுடன், அரசு வேலை வழங்கியதற்கும் குற்றவாளிகளை கைது செய்ய துரித நடவடிக்கை எடுத்ததற்கும் முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தூத்துக்குடி முறப்பநாடு பகுதியில் நடைபெற்ற கொலை போன்றே, சேலம் ஓமலூர், மானாத்தாள் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார், மணல் கடத்திய வாகனத்தை பிடித்ததால், அவரைவிரட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது போன்ற சம்பவங்களால் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் அச்சத்துடனும், பாதுகாப்பற்ற நிலையிலும் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு பணி செய்யும் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்புக்காக தற்காப்பு பயிற்சிஉடனடியாக வழங்கப்பட வேண் டும்.

தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்கவும் அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும். புகார் அளித்ததும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்கள் அச்சுறுத்தல் வரும்போது பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்களிடம் மனு அளித்தால் அதை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும்.

தமிழகத்தில் பெரும்பாலும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால், பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்கள் அல்லது குடியிருப்புகள் அருகில் கட்டிக்கொடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிட வேண்டும். பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதால் பணி கிராமங்களில் தங்குதல் வேண்டும் என்ற விதியை தளர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.