ரூ.500 கோடி கோகைன் பறிமுதல்- மும்பை துறைமுகத்தில் தொடரும் கடத்தல்கள் ..!!

மும்பை: மும்பை நவசேவா துறைமுகத்தில் கப்பலில் இருந்து இறக்கப்பட்ட கன்டெய்னர் ஒன்றை மும்பை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் திறந்து சோதனை செய்தனர்.

அப்போது, அதில் ரூ.500 கோடி மதிப்புள்ள 50 கிலோ கோகைன் போதை பொருள் இருந்தது. இந்த கப்பல் தென்னாபிரிக்காவில் இருந்து பச்சை ஆப்பிள், பேரிக்காயை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது.

இந்த பழங்களுக்கு இடையேதான் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் இருந்து கப்பலில் ஆரஞ்சு பழங்களில் 198 கிலோ எடையுள்ள மேக், 9 கிலோ கோகைன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் கைது செய்யப்பட்டவரே, இப்போது ரூ500 கோடி கோகைனையும் கடத்தி இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

அமித்ஷா கண்ணெதிரே 40,000 கி. போதை பொருட்கள் அழிப்பு
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் 75 நாட்களுக்கு போதை பொருட்கள் சோதனை நடத்தப்படும் என்றும், 75 ஆயிரம் கிலோ போதை பொருட்கள் கண்டுபிடித்து அழிக்கப்படும் என்றும் ஒன்றிய போதை பொருள் கட்டுபாடு அமைப்பு அறிவித்தது. இந்த இலக்கை 60 நாட்களில் அது எட்டியது. இதில், வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிய 40 ஆயிரம் கிலோ போதை பொருட்கள், நேற்று பல்வேறு இடங்களில் அழிக்கப்பட்டன. இவற்றை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலியில் கண்டார்.