சில அதிகாரிகளின் அலட்சியத்தினால் வெள்ளலூர் பாலத்தை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அவதி- நிரந்தர தீர்வு காண கோரிக்கை..!

கோவை சிங்காநல்லூர்-வெள்ளலூர் சாலையில் ரெயில்வே பாலத்துக்கு அடுத்துள்ள நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழைய பாலத்துக்கு பதில் புதிய பாலம் கட்டப்படுகிறது. ஆனால் தற்போது மழை காரணமாக அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதிய பாலம் கட்டும் வரை வெள்ளலூர், பட்டணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்கள் கோவை நகருக்குள் வருவதற்கு வசதியாக புதிய பாலம் கட்டும் இடத்திற்கு அருகிலேயே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அதன் வழியே அனைத்து வாகனங்களும் சென்று வந்தன.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது பெய்த பலத்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தற்காலிக தரைப்பாலம் மூன்று முறை அடித்துச் செல்லப்பட்டது. ஒவ்வொரு முறை அடித்து செல்லப்பட்ட பின்னரும் அதே இடத்தில் உயரத்தை அதிகரிக்காமல் மீண்டும் தற்காலிக தரைப்பாலம் போடப்படும். இந்நிலையில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் வெள்ளலூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதன் காரணமாக தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது அந்த பகுதி மக்களை பல்வேறு இன்னல்களுக்குள்ளாக்கி உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:- சிங்காநல்லூர்-வெள்ளலூர் இடையிலான நொய்யல் ஆற்று பழைய பாலத்தை இடிக்கும் போதே அதற்கு அருகில் தற்காலிக தரைப்பாலம் போடப்பட்டது. அதன் பின்னர் புதிய பாலத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அந்த பாலம் வழியாக சென்ற குடிநீர் குழாயை மாற்றி அமைக்காததால் கட்டுமான பணிகள் நின்றன். தரைப்பாலம் போடும் போது சற்று உயர்த்தி அமைத்திருக்கலாம். ஆனால் உயரம் குறைவாக தரைப்பாலம் அமைத்ததால் 3 முறை அது அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
தற்போது நான்காவது முறையும் உயரத்தை அதிகரிக்காமல் ஏற்கனவே போடப்பட்ட தரைப்பாலத்தின் மீது கான்கிரீட் மட்டும் கூடுதலாக போட்டுள்ளனர். இதனால் இந்த முறை அது அடித்துச் செல்லப்படவில்லை. ஆனால் தொடர்ந்து தண்ணீர் சென்றால் அதுவும் அடித்துச் சென்று விடுமா? என்பது போகத் போகத் தான் தெரியும். குடிநீர் குழாய்களை கோடைக்காலத்தில் மாற்றி அமைத்திருந்தால் தற்போது புதிய பாலத்துக்கான கான் கிரீட்போடப்பட்டிருக்கும். ஆனால் இப்போது ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நிரந்தர பாலத்துக்கான பணிகளை தொடங்க முடியாத நிலையில் கட்டுமான நிறுவனத்தினர் உள்ளனர். மழைக்காலம் நீடிக்கும் 3 மாதமும் இனி எந்த பணியும் நடக்காது.
ஒரு சில அதிகாரிகளின் அலட்சியத்தினால் அந்த பாலத்தை தினமும் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பப்பட்டு வருகிறார்கள். எனவே நொய்யல் ஆற்று தரைப்பாலத்துக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.