போயஸ் தோட்டத்தில் சசிகலா… புது வீட்டில் கோ பூஜை நடத்தி குடியேறினார்..!!

சென்னை: சென்னையில் உள்ள போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த சசிகலா, மீண்டும் அதேபகுதியில் உள்ள புதிய வீட்டில் கோ பூஜை செய்து நேற்று குடியேறினார்.

எம்ஜிஆர் மறைவுக்கு முன்பிருந்தே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன், அவரது சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தில் வசித்து வந்தவர் சசிகலா. ஜெயலலிதா முதல்வரானது முதல், அவர் மறைவு வரை அதே வீட்டில் வாழ்ந்து வந்தார். அப்பகுதி இடம்பெற்றுள்ள ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளர் பட்டியலிலும் தனது பெயரை சேர்த்துக்கொண்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2017-ம் ஆண்டு சசிகலா ஆதரவுடன் பழனிசாமி தமிழக முதல்வரானார். பிறகு பழனிசாமி உள்பட அதிமுகவினர் பெரும்பாலானோர் சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தனர்.

சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு வந்து, ஆளுமை செய்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக அப்பகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டது.

தனது வாழ்நாளின் பெரும்பாலான காலங்களை பெரும் செல்வாக்குடன் போயஸ் தோட்டத்தில் கழித்த சசிகலா, இனி வரும் காலங்களையும் ஜெயலலிதா நினைவாக போயஸ் தோட்டத்திலேயே கழிக்க முடிவு செய்து, வேதா நிலையத்துக்கு எதிரில் நிலம் ஒன்றை வாங்கி வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டில் கோ பூஜை நடத்தி, விநாயகரை வழிபட்டு சசிகலா நேற்று குடியேறினார்.

எளிமையாக நடத்தப்பட்ட புதுமனை புகுவிழாவில் பங்கேற்க நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சசிகலாவின் அண்ணி இளவரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு சசிகலா மலர்கள்தூவி மரியாதை செலுத்தினார்.

அண்மையில் கோடநாடுக்கு சென்ற சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் அமைக்க பூஜை நடத்தியிருந்தார். பிறகு சொந்த ஊருக்கு சென்று குலதெய்வ வழிபாடும் நடத்தினார். இந்நிலையில்தான் பெரும் செல்வாக்குடன் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் புதிய வீடு கட்டி சசிகலா குடியேறி இருக்கிறார்.