கோவையில் இரு மடங்கு பணம் தருவதாக கூறி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி

இரு மடங்கு பணம் தருவதாக கூறி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒடையகுளம் ஓ.எஸ்.பி. நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்( 40). தொழில் அதிபரான இவர் ஒடையகுளத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரனுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்தவர் என்றும், தன்னிடம் கருப்பு பணம் இருப்பதாகவும், குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் அதற்கு இரு மடங்கு தொகையை தருவதாகவும் கூறினார். இதை நம்பிய ராஜேந்திரன், கிணத்துக்கடவு அருகே முள்ளுப்பாடி ரெயில்வே கேட் அருகே அவரை வரவழைத்து ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். பின்னர் அந்த நபர், ரூ.50 ஆயிரத்தை திரும்ப வழங்கினார். இதையடுத்து மீண்டும் ராஜேந்திரனை தொடர்பு கொண்ட அந்த நபர், தன்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால், ரூ.10 லட்சம் தருவதாக கூறினார். இதனால் ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு தனது மைத்துனர் பால கிருஷ்ணமூர்த்தி மற்றும் சதீஷ்குமார் ஆகியோருடன் முள்ளுப்பாடி ரெயில்வே கேட் அருகில் வந்தார். பின்னர் அங்கு நின்ற அந்த நபரிடம் ரூ.5 லட்சத்தை கொடுத்தார். தொடர்ந்து அந்த நபர், ரூ.10 லட்சம் இருப்பதாக கூறி ஒரு பொட்டலத்தை கொடுத்தார். அந்த பொட்டலத்தை பிரித்து பணத்தை எண்ணி பார்க்க முயன்றபோது, வருமான வரி அதிகாரிகள் வர உள்ளனர், உடனடியாக புறப்படுங்கள் என்றுக்கூறி அவர்களை பயமுறுத்தினார். இதனால் ராஜேந்திரன் உள்பட 3 பேரும், தங்களது ஊருக்கு விரைந்தனர். வீட்டுக்கு சென்ற பிறகு அந்த பொட்டலத்தை பிரித்து பணத்தை எண்ண முயன்றபோது, வெள்ளை காகிதங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கைது இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த ராஜேந்திரன், கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். பின்னர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர், பாலக்காடு அருகே உள்ள மேனாம்பாறையை சேர்ந்த சண்முகம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது, கோவை அருகே மரப்பாலம் பகுதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.