ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலை விவகாரம்: திமுக கூட்டணியில் கடும் மோதல் – காங்கிரஸ் ஜோதிமணிக்கு விசிக வன்னி அரசு பதிலடி..!

சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த அனைவரும் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகளிடையே கடும் மோதல்கள் வெடித்துள்ளன.

சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிவிட்ட கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த அத்தனை பேரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். விடுதலை செய்யப்பட்ட நளினி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதன் பின்னரும் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். சென்னையில் பேட்டி அளித்த நளினிக்கு விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு இனிப்பு ஊட்டி வரவேற்றார். இது சமூக வலைதளங்களில் விவாதமானது.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாவது: ராஜீவ் காந்தி கொலையாளிகள் உச்சநீதிமன்றத்தால் நீண்டகாலம் தண்டனை அனுபவித்ததன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த கொடிய குற்றத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அந்த மனிதவெடிகுண்டு ராஜீவ் காந்தியை மட்டுமல்ல பல தமிழர்களையும் பலிகொண்டு விட்டது.

குண்டுவெடிப்பில் தங்கள் உயிருக்குயிரானவர்களை பலிகொடுத்த குடும்பங்கள் இன்னும் ஆறாத காயத்தோடு இதே தமிழ் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஊடகங்களும்,சில தனிநபர்களும் கொலையாளிகளைக் கொண்டாடுவது மாபெரும் தவறு.மன்னிக்க முடியாத குற்றம். காந்தியைக் கொன்ற கோட்சேவைக் கொண்டாடுகிற ஆர் எஸ் எஸ் பாஜகவிற்கும் , இன்று ராஜீவ் காந்தி கொலையாளிகளைக் கொண்டாடுபவர்களுக்கும் என்ன வேறுபாடு? கருணை அடிப்படையில் குற்றவாளிகள் மன்னிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் குற்றவாளிகளைக் கொண்டாடுவது அநாகரிகமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. இவ்வாறு ஜோதிமணி விமர்சித்திருந்தார்.

ஜோதிமணியின் இந்த விமர்சனத்துக்கு வன்னி அரசு அளித்த பதில்: காந்தியை கொன்ற கோட்சேவும் அவனது கும்பலும் கொலை செய்ததை ஞாயப்படுத்தியும் பெருமை பொங்கவும் அரசியல் செய்கிறது. ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் கைதான யாராவது அப்படி சொல்லி இருக்கிறார்களா?நாங்கள் ‘அப்பாவிகள்”அப்பாவிகள்’ எனும் அந்த குரல் கேட்ட பிறகும் இப்படி பொதுமைப்படுத்துவது ஞாயமா தோழர்? இவ்வாறு வன்னி அரசு கூறியுள்ளார்.