ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா.. தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டது..!!

ஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா இன்றும் நாளையும் கொண்டாடப்பட உள்ள நிலையில், தஞ்சை பெருவுடையார் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடக்கத்தில் ராஜராஜ சோழனின் ஐப்பசி சதய விழா தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு விழாவுக்கு கடந்த மாதம் 25ம் தேதி பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது.

சங்க காலத்தின் மூன்று பேரரசுகளில் ஒன்றான சோழ பேரரசு காலத்தில் கட்டப்பட்டதுதான் தஞ்சை பெரிய கோயில். கிபி 1003 முதல் 1010 வரை கட்டப்பட்ட இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளை கடந்த பின்னரும் தமிழர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த பிரசித்தி பெற்ற கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஐப்பசி சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்றும் நாளையும் இந்த விழா பெரிய கோயிலில் நடைபெற உள்ளது. இதனால் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

முன்னதாக கடந்த 25ம் தேதி பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு கோயிலில் பந்தக்கால் நடப்பட்டது. இதனையடுத்து இன்று கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, கவியரங்கம், பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெற உள்ளது. அதேபோல நாளை, காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதன்பின்னர் ஓதுவார்களின் வீதியுலா நடைபெறும். இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வெளியில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு கோயில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். இதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் மலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

இதனையடுத்து ராஜராஜசோழன் மற்றும் உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பு புனித நீரை வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்துவார்கள். தொடர்ந்து, பெருவுடையார் மற்றும் பெரிய நாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை செய்யப்படும். பின்னர் இரவு ராஜராஜன் மற்றும் உலகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெறும்.

இந்த கொண்டாட்டங்களையொட்டி கோயில், ராஜராஜன் சிலை, நகரின் முக்கிய பகுதிகள் வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. காலை 9 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் விழாவை தொடக்கி வைக்கிறார். பின்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் ‘ராஜராஜ சோழன்’ குறித்த கருந்தரங்கை தொடங்கி வைக்கிறார். இப்படியாக தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இறுதியாக இரவு நிறைவு விழாவில் கோயிலின் அகத்திய சன்மார்க்க சங்கச் செயலர் சிவ.அமிர்தலிங்கம், தஞ்சை மருத்துவக் கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வர் பி.ஜி.சங்கரநாராயணன், சைவ சித்தாந்தப் பேராசிரியர் வீ.ஜெயபால் ஆகியோருக்கு ராஜராஜன் விருது வழங்கப்படுகிறது.