ராணி எலிசபெத்தின் மரணத்தால் முடிவுக்கு வந்தது மன்னர் குடும்ப பிரச்சனை: சமரச பேச்சில் இணைந்த சகோதரர்கள்-கெட்டதலிலும் ஒரு நல்லது..!!

ண்டன், : ராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததை தொடர்ந்து, அவருடைய குடும்பத்தில் நிலவி வந்த மோதல்களும் முடிவுக்கு வந்துள்ளன.

அரண்மனையை விட்டு வெளியேறிய இளவரசர் ஹாரியும், அவருடைய சகோதரரான இளவரசர் வில்லியமும் சமரசமாகி கைகோர்த்துள்ளனர். அவர்கள் தங்கள் மனைவிகளுடன் பொதுவெளியில் நேற்று வந்ததை பார்த்து மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வியாழக் கிழமை ஸ்காட்லாந்தில் உயிரிழந்தார். பால்மோரல் அரண்மனையில் உள்ள அவருடைய உடல், லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை வாசலில் குவிந்துள்ளனர்.

ராணியின் செல்ல பேரப்பிள்ளைகளாக அப்போதைய இளவரசரும், தற்போதைய மன்னருமான சார்லஸ் (3) – மறைந்த டயானா தம்பதியின் மகன்களான இளவரசர்கள் ஹாரி, வில்லியம்ஸ் இருந்தனர். இவர்களில் சார்லசின் 2வது மகனான ஹாரி, அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகனை திருமணம் செய்தது ராணிக்கு பிடிக்கவிலலை. இதனால், குடும்பத்தில் மோதல் ஏற்பட்டது. இனவெறியால் மேகன் புறக்கணிக்கப்படுவதாக, ராணியின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக, இளவரசர் பட்டமும், அரச குடும்பத்தின் எந்த அடையாளமும் வேண்டாம் என்று கூறி விட்டு, தனது மனைவியுடன் ஹாரி அமெரிக்கா சென்றார். ஆனால், வில்லியமும், அவருடைய மனைவி கேத்தும் பக்கிங்காம் அரண்மனையிலேயே வாழ்ந்து வந்தனர். ராணி எலிசபெத் இறந்த நிலையிலும், அவருக்கு உடனடியாக அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என்று ஹாரிக்கு உத்தரவிடப்பட்டது.

அவருடைய மனைவி மேகன், தனது பிள்ளைகளுடன் லண்டன் வர மறுத்து விட்டார். இதனால், எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் ஹாரி-மேகன் குடும்பம் பங்கேற்குமா? என்ற கேள்வி, உலகம் முழுவதும் எழுந்தது. .எலிசபெத் இறக்கும்போது அவருக்கு அருகில் மொத்த குடும்பமும் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக பால்மோரல் அரண்மனைக்கு சென்றனர். ஹாரி மட்டும் கடைசியாகதான் அங்கு சென்றார். ஆனால், மறுநாளே அவர் சென்று விட்டார். வில்லியமுக்கும் அவருக்கு ஏற்பட்ட மோதல்தான் இதற்கு காரணம் என தகவல் வெளியானது. இதையடுத்து, தனது மகன்களிடம் மன்னர் சார்லஸ் போனில் பேசி சமரசம் செய்துள்ளார். இருவரையும் தங்கள் மனைவியுடன் லண்டன் வரும்படி உத்தரவிட்டார். ஆனால், ஹாரி இதற்கு உடன்படவில்லை. தனது மனைவி மேகன் இழிவுப்பட்டதை அவர் மறக்கவில்லை.

மேகனும் இந்த அழைப்பை நிராகரிக்கும் மனநிலையில் இருந்தார். இறுதியில், மன்னரே அழைப்பு விடுத்ததால், சமரசத்துக்கு ஒத்துக் கொண்டனர். அவர்களிடம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 11 மணி நேரத்துக்கு மேல் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், வில்லியமும், ஹாரியும் தங்கள் மனைவியுடன் ராணியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தனர். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பொதுவெளியில் தம்பதிகளை பார்க்காத இங்கிலாந்து மக்கள், முதல் முறையாக இவர்களை பார்த்ததும் ஆரவாரம் செய்தனர். துக்கத்திலும் ஒரு நன்மை நடந்துள்ளதாக அவர்கள் மகிழ்ந்தனர். ராணியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்க விண்ட்சர் தோட்டத்தின் வாசலில் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், வில்லியம் – கேத், ஹாரி – மேகன் தம்பதிகளுடன் கைகுலுக்கி அன்பை பகிர்ந்து கொண்டனர்.

2 ஜோடிகளும் 40 நிமிடம் நடைப்பயணமாக சென்று, ராயல் எஸ்டேட்டின் வாயிலில் மலர் அஞ்சலி செய்தனர். அரசு குடும்பத்துடன் ஹாரி – மேகன் மீண்டும இணைந்ததால், மன்னர் குடும்பத்தில் பல்வேறு முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஹாரி, மேகனுடன் பேசிய மன்னர் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘2 சகோதரர்களும் ஒன்று சேர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் மீண்டும் அரண்மனையில் ஒன்றாக வசிப்பதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இது, ராணி எலிசபெத்தின் கடைசி விருப்பமாக கூட இருந்திருக்கலாம்,’ என தெரிவித்தார். இதன்மூலம், ராணியின் கடைசி விருப்பத்தின்படி, ஹாரி -மேகன் தம்பதி மீண்டும் பக்கிங்காம் அரண்மனைக்கு அழைக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது.

ராணி எலிசபெத்துக்கு அவரது தாய், தந்தைவழி பாட்டி மற்றும் தந்தைவழி பெரியம்மா ஆகியோரின் நினைவாக ‘எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி வின்ட்சர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால், குழந்தையாக இருந்த அவரால் ‘எலிசபெத்’ என்ற தனது பெயரை சரியாக உச்சரிக்க முடியவில்லை. இதனால், அவருக்கு எளிதாக வாயில் நுழையும்படி. குடும்பத்தினர் அவரை `லிலிபெட்’ என்று பெயரிட்டு அழைத்தனர்.

ராணியின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் சார்லஸ் மன்னர் 3வது சார்லஸ் ஆக அறிவிக்கப்பட்டார். இதற்கான பதவியேற்பு விழா லண்டனில் நடந்தது போல், கனடா நாட்டின் ஒட்டாவாவிலும் நடந்தது. இதன் மூலம், மன்னர் சார்லஸ் கனடாவின் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லண்டனில் நடைபெறும் ராணி எலிசபெத் இறுதிசடங்கில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க உள்ளதாக, அந்நாட்டு பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்தது. முன்னதாக, இலங்கையில் உள்ள இங்கிலாந்து தூதரகம் சென்ற அவர் அங்குள்ள புத்தகத்தில் தனது இரங்கலை பதிவு செய்தார்.

ராணி எலிசபெத்தின் இறுதிசடங்கு, வரும் 19ம் தேதி நடப்பதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 19ம் தேதி வரை நடக்க உள்ள இறுதிச்சடங்கு விவரங்களையும் அது வெளியிட்டுள்ளது. இதற்கு, ‘ஆபரேஷன் லண்டன் பாலம்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. 13ம் தேதி: ஸ்காட்லாந்தில் இருந்து ராணியின் உடல் நாளைதான் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. 14ம் தேதி: பக்கிங்காம் அரண்மனையில் இருந்து நாடாளுமன்றத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு எலிசபெத்தின் உடல் கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

16ம் தேதி : மன்னர் சார்லசும், அவருடைய மனைவியும் வேல்ஸ் நகருக்கு சென்று, ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய நான்கு நாடுகளுக்கும் சென்றுவிட்டு திரும்புவார்கள். 19ம் தேதி: எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் நடக்கும். அவருடைய உடல் ஊர்வலமாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்படுகிறது. அப்போது, அவருடைய கணவர் பிலிப் உடலும் எடுத்து வரப்பட்டு அருகருகே அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.