மதிமுகவுக்கு புதிய அவைத் தலைவர் – பொருளாளர் துரை வைகோ முதன்மைச் செயலாளராக புரோமோஷன்..!

சென்னை: மதிமுகவில் காலம் காலமாக ஒரே பதவியில் அமர்ந்திருந்தவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் புது முகங்களுக்கு முக்கியப் பொறுப்புகளை கொடுத்திருக்கிறார் வைகோ.

அந்த வகையில் மதிமுகவின் புதிய அவைத்தலைவராக ஆடிட்டர் அர்ஜூன் ராஜும், பொருளாளராக செந்திலதிபனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மதிமுக தலைமைக்கழகச் செயலாளராக இருந்த துரை வைகோ, இப்போது மதிமுக முதன்மை செயலாளராக புரோமோஷன் ஆகியிருக்கிறார்.

மதிமுகவின் 5வது அமைப்பு உட்கட்சித் தேர்தல் சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் முடிவுற்ற நிலையில் தலைமைக்கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் மதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி மீண்டும் வைகோ தேர்வாகியுள்ளார்.

அதேபோல் இதுநாள் வரை மதிமுக பொருளாளர் பதவி ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி வசம் இருந்த நிலையில் இப்போது அந்தப் பதவி செந்திலதிபன் வசம் மாறியுள்ளது. இதேபோல் மதிமுக அவைத்தலைவர் பதவி திருப்பூர் துரைசாமி வசம் இருந்த நிலையில் அந்தப் பதவியும் இப்போது ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் வசம் கைமாறியுள்ளது.

மதிமுக துணை பொதுச்செயலாளர்களாக மல்லை சத்யா, டாக்டர் ரொஹையா, செஞ்சி மணி, ஆடுதுறை முருகன், தி.மு.ராஜேந்திரன் ஆகியோர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இதுநாள் வரை துரை வைகோ வகித்த மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் பதவிக்கு புதிதாக யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மதிமுக தலைமைக்கழகமான தாயகம் அலுவலகத்தில் வைகோவுடன் புதிய நிர்வாகிகள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் வாழ்த்தும் பெற்று மகிழ்ந்தனர்.