பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்… இன்று முதல் வீடு வீடாக விநியோகம்..!

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி தொடங்கி வைக்கிறார். அன்று முதல், அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்வதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. வீடுவீடாகச் சென்று ஊழியர்கள் டோக்கன்களை வழங்குகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 8ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும்.

இந்த டோக்கனில் பரிசுத் தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 22ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. கரும்பும் இடம்பெற வேண்டும் விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர் என்று பல்வேறு தரப்பினரும் வைத்த கோரிக்கைள் ஏற்கப்பட்டு கரும்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.