சர்ச்சைக்குரிய சுவரொட்டி ஓட்டினால் கடும் நடவடிக்கை – போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை மாநகரில் சில பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் எதிர அமைப்புகள் சார்பில் சுவரொட்டிகளும், போஸ்டர்களும், போட்டி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகிறது. எனவே கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் சட்டம்- ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆட்சேபிக்குமான கருத்துக்கள் இருக்கும் பட்சத்தில் அந்த சுவரொட்டியை தயாரித்த மற்றும் அதில் இடம் பெற்றுள்ள பொறுப்பாளர்கள் மற்றும் அச்சடித்த அச்சகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுடன் கூடிய வாசகங்கள் அல்லது சித்திரங்களுடன் கூடிய சுவரொட்டியை யாராவது அச்சிட கொடுத்தால் சம்பந்தப்பட்ட அச்சகத்தினர் அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. சுவரொட்டிகளில் அச்சகத்தின் பெயர் உரிமம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். குறிப்பிட வில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.