கோவை : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் தாலிப் ராஜா ( வயது 29)இவர் மீது திருப்பூர் வடக்கு ,நல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் நகை பறிப்பு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருப்பூர் கோர்ட்டில் நடந்து வருவதால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த கடந்த 7-ந் தேதி கோவையிலிருந்து அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைப்பதற்காக கோவை மத்திய சிறைக்கு பஸ்சில் அழைத்து வந்தனர். அந்த பஸ் கோவை ஒண்டிப்புதூர் வந்த போது பஸ் நிறுத்தத்தில் நின்றது. அதை சாதகமாக பயன்படுத்திய தாலிப் ராஜா திடீரென்று பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். இருந்தபோதிலும் அவர் தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் தப்பி ஓடியவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தாலிப் ராஜாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் வேடசந்தூரில் உள்ள உறவினரின் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று அங்கு சென்றனர் .பின்னர் அவர்கள் அந்த வீட்டில் பதுங்கி இருந்த தாலிப் ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Leave a Reply