வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழை..!

சென்னை: தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகவுள்ளது.

இது வலுவடைந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறவுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று கூறியதாவது: அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) உருவாகக் கூடும். இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

இதற்கடுத்த 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும். அதன்படி 24 அல்லது 25-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், பெரம்பலூர், கடலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 26 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 20-ம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன் மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.