நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் வெளியிட்ட தனது காணொளிக்கு மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி மீண்டும் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில்,எனது முந்தைய பதிவை பார்த்து தங்களது கருத்துகளையும் ஆதரவையும் பகிர்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. குறிப்பாக இளைஞர்கள் தெரிவித்த எண்ணங்களும் ஆலோசனைகளும் எனக்கு மிகவும் ஊக்கமளித்தன. உங்கள் அன்பும் நம்பிக்கையும் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு வெளியிட்டிருந்த செல்ஃபி வீடியோவில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் கூறியிருந்தார். அதில், நீட் தொடர்பான குற்றச்சாட்டுகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேவையான சட்டத் திருத்தங்கள் குறித்து அமைச்சரவையில் ஆலோசித்து, அவற்றை நாடாளுமன்றத்தில் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது. வெளியான முதல் 24 மணி நேரத்திலேயே நூற்றுக்கணக்கான மில்லியன் பார்வைகளை கடந்து, உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட இன்ஸ்டாகிராம் ரீல்களில் ஒன்றாக மாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் முந்தைய பார்வை சாதனையை முறியடித்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல், இந்த வீடியோ வெளியான பிறகு பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக பின்தொடரத் தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தொடர்ந்து வெளியிட்டுள்ள புதிய காணொளியில், தன்னை ஊக்குவித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்து, குறிப்பாக இளைஞர்களின் பங்களிப்பை பாராட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் அவரது புதிய பதிவு மீண்டும் அதிக கவனம் பெற்று வருகிறது.
நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் வெளியிட்ட தனது காணொளிக்கு மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.






