பீகாரில் கங்கை நதியின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை தாண்டியதை தொடர்ந்து 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்கஞ்ச் பகுதியில் கங்கை நதியின் நீர்மட்டம் நேற்று வெள்ள அபாய அளவை தாண்டியது. குறிப்பாக டும்ரியர்காட் மற்றும் ஹாஜிபூரில் கண்டக் ஆறும், பல்தாரா மற்றும் குர்செலாவில் கோசி ஆறும், ககாரியாவில் கண்டன் ஆறும் திகா, காந்தி காட், ஹதிதா, பாகல்பூர், கஹல்கான் மற்றும் முங்கர் ஆகிய இடங்களில் கங்கை அறும் அபாயக் குறியீட்டுக்கு மேல் பாயந்து வருகின்றன.
இதனை தொடர்ந்து கரையோரத்தில் உள்ள மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். காரிக் ரகோபூர் வெள்ளப் பாதிப்பு பகுதியில் சிறிய படகு கவிழ்ந்தது. இதில் இருந்த 10 பேர் மாநில பேரிடர் மீட்பு படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பாட்னா, பாகல்பூர், வைஷாலி, சரண், பெகுசராய், ககாரியா மற்றும் முங்கர் உள்ளிட்ட பீகாரின் 13 மாவட்டங்களில் உள்ள 480 கிராம ஊராட்சிகளில் சுமார் 34.31 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 432 சமுதாய சமையலறை தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் 14 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தங்குமிடம்,உ ணவு, மருத்துவ வசதி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கான ஏற்பாடுகள் அரசு அதிகாரிகள் மூலம் செய்யப்பட்டுள்ளன.







