அமெரிக்கா மற்றும் லெபனான் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானச் சேவை மீண்டும் தொடங்க இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக, அமெரிக்காவின் ‘பிளைட் 847’ விமானம் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, 1985 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் லெபனானுடனான விமானச் சேவையைத் தடை செய்தார்.
பாதுகாப்பது காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட விமானச் சேவை, தற்போது மீண்டும் தொடங்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சமீபத்தில், லெபனான் அதிபர் ஜோசப் அவுன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைச் சந்தித்துப் பேசிய பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த சந்திப்பில், பல முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த சந்திப்பிற்குப் பிறகு பேசிய ட்ரம்ப், ‘லெபனான் கடந்த பல பத்தாண்டுகளாக கடும் இன்னலில் தவித்து வருகிறது. இனி அந்த நாட்டிற்கு உரிய மரியாதையும், முழு ஆதரவும் கிடைக்க அமெரிக்கா துணை நிற்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மோதல் போக்கினை தடுத்து, அமைதியை நிலைநிறுத்துவது குறித்தும் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.






