இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

க்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று  அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.

தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அலுவலகம் அமைக்கப்பட்டு, வேட்புமனு படிவங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளுக்காகக் கண்காணிக்கும் கேமராக்களும் பொருத்தப்பட்டு வருகின்றன.இத்தொகுதியில் உரிய ஆவணமின்றி ரூ.50,000க்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் எனவும், இதற்காக 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலெக்டர் வீரப்பன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1950, 1800-425-7088, 044-27427412 ஆகிய தொலைபேசி எண்களில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2,13,689 வாக்காளர்கள் (1,04,886 ஆண் வாக்காளர்கள், 1,08,738 பெண் வாக்காளர்கள் மற்றும் 65 மூன்றாம் பாலின வாக்காளர்கள்) உள்ளனர். இவர்களுக்காக 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளைக் கண்காணிக்க 9 பறக்கும் படைகளும், 9 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், பிரசாரக் கூட்டங்கள் நடத்துதல், ஒலிபெருக்கிப் பயன்படுத்துதல், வாகன ஊர்வலம் மற்றும் தற்காலிகக் கட்சி அலுவலகம் அமைத்தல் போன்றவற்றுக்குத் தேர்தல் ஆணையத்தின் இணையதளச் செயலி மூலம் உரிய முன் அனுமதி பெற வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.