பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்க லஞ்சம் கேட்டு தொந்தரவு… இளைஞர் விஷம் குடித்து தற்கொலை: வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்- மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்க லஞ்சம் கேட்டு தொல்லை செய்ததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கான தொகை ரூ. 2.75 லட்சம் 6 தவணையாக விடுவிக்கப்படும். இந்த நிலையில் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரன் என்பவர் முதல் தவணை பணம் ஏற்றுவதற்கு லஞ்சம் கேட்டுள்ளார்.

அதற்கு மணிகண்டனிடமிருந்து ரூ.18 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணத்தை விடுவித்துள்ளார் மகேஸ்வரன். அதன் பின்னர் 2வது தவணை பணம் வந்த நிலையில் அதனையும் ஏற்றாமல் இழுத்தடிப்பு செய்துள்ளார் மகேஸ்வரன். இதனால் மனமுடைந்த மணிகண்டன், நேற்று மாலை தனது வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மேலும், தான் விஷம் குடிப்பதற்கான காரணத்தைக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, சமூக வலைதளங்கள் வாயிலாக தகவல் அறிந்த உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞர் மணிகண்டனை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி இளைஞர் மணிகண்டன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பேரளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுக்கு ஆளான, நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.