கோவை: தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
விமானம் ஏற செல்ல வேண்டிய வழி உள்பட பல்வேறு உதவிகளை இந்த ரோபோக்கள் பயணிகளுக்கு வழங்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் கோவை சர்வதேச விமான நிலையமும் ஒன்று. இங்கிருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்தியாவின் தலைநகர் டெல்லி, மும்பை, கொல்கத்தா, மற்றும் தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்பட பிற நகரங்களுக்கு விமானங்கள் சென்று வருகின்றன.
இந்த விமான நிலையத்தின் மூலம் தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடு, வெளிமாநில பயணிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவை விமான நிலையம் வரும் பயணிகளுக்கு தேவையான உதவிகள் உதவி மையம் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பதில் தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பயணிகளுக்கு உதவி செய்யும் வகையில் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இந்த ரோபாக்கள் செயற்கை நுண்ணறிவுடன் செயல்பட உள்ளன. இந்த ரோபோ பயன்பாடு இன்று மாலை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. முதற்கட்டமாக 2 ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்படும். இந்த ரோபாக்கள் மூலம் பயணிகளுக்கு தேவையான தகவல்களை முழுமையாக வழங்க முடியும்.
இந்த ரோபா யாரின் உதவியும் இன்றி தானாக நகரும் தன்மை கொண்டது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்று, அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும். மேலும், பயணிகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ள விரும்பினால், ரோபோ உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை அளிக்கும். இந்த ரோபோக்கள் பயணிகள் விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் உள்ளிட்ட இடங்களுக்கான வழிகளை பயணிகளுக்கு தெரிவிக்க உள்ளது.
இதுபற்றி விமான நிலையத்தின் இயக்குனர் செந்தில் வளவன் கூறுகையில், ”கோவை விமான நிலையத்துக்கு தினமும் சுமார் 50 விமானங்கள் வந்து செல்கின்றன. ஒரு நாளில் மட்டும் சுமார் 7200 முதல் 7500 பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இன்று மாலை பயணிகளின் வசதிக்காக ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த ரோபோக்களிடம் இருந்து பயணிகள் விமானத்தின் ஸ்டேட்டஸ், செல்ல வேண்டிய பாதை, உணவு, பானங்களின் கடைகள் உள்ளிட்ட விபரங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.
ஒருவேளை ரோபாக்களால் பதில் அளிக்க முடியாவிட்டால் உடனடியாக விமான நிலைய உதவி மையத்தை ரோபோக்களின் ஸ்கீரின் மூலம் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பயன்பெற முடியும். இந்த வகை செயல்பாடு கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக கோவை விமான நிலையத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இந்த திட்டம் இன்று முதல் 6 மாதம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ‘Temi’ ரோபோ தயாரிப்பு நிறுவனம் 2 ரோபோக்களை கோவை விமான நிலையத்துக்கு வழங்கி உள்ளது. இந்த ரோபோக்களிடம் ஆங்கிலம் மொழியில் உரையாடி பதில்களை பெறலாம். இந்த ரோபோக்களிடம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply