ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரம்: சரத் குமார் நடிக்க வேண்டாம்-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்..!

சென்னை: ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு ஆதரவான விளம்பரங்களில் நடிகர் சரத் குமார் நடிக்க வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ஆன்லைன் ரம்மியை ஒழிக்க தமிழக அரசு சார்பில் குழு அமைப்பட்டு தற்போது அந்த குழுவும் தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக, பாஜக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதேபோல் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்க பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்டோரிடம் தமிழக அரசு கருத்து கேட்டு வருகிறது.

அதே நேரத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டும் என பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான் முதல் தமிழகத்தில் தமன்னா, மனோபாலா, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். ஒவ்வொரு முறை யூட்யூபை திறக்கும் போது, நடிகர் சரத் குமாரின் விளம்பரம் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டியை சந்தித்து பாமக சார்பில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை முழுமையாக தடை செய்ய வேண்டும், மற்ற ஆன்லைன் விளையாட்டுகளையும் ஒழுங்குபடுத்த வேண்டும் என வலியுறுத்தி கடிதம் கொடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் அதி தீவிரமாக முனைப்பு காட்டி முற்றிம் தடை செய்து ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நிம்மதியை உறுதி செய்ய வேண்டும். சுதந்திர தினத்தன்று தமிழக அரசு பூரண மதுவிலக்கு தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும். குறைந்தபட்சம் படிப்படியாக குறைப்பதற்கான செயல் திட்டத்தை வெளியிட வேண்டும்.

தொடர்ந்து நடிகர் சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு ஆதரவான விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.