ஒடிசா ரயில் விபத்து : 5 ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..!

புதுடில்லி : ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக, ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட ஐந்து ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில், 288 பேர் உயிரிழந்தனர். 1,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வரும் நிலையில், மனித தவறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார். விபத்து நடந்த போது, பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ‘சிக்னல்’ பணிகளை கவனித்த நான்கு ஊழியர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இவர்கள் ஐந்து பேரும் தற்போது பணியில் தொடர்கின்றனர். ரயில்வே பாதுகாப்பு கமிஷனரின் விசாரணை அறிக்கை வெளியான பின், அதன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.