சூலூர் பீடா கடையில் 4,276 கஞ்சா சாக்லெட்களுடன் வடமாநில வியாபாரி கைது..!

கோவை அடுத்த சூலூர் பக்கம் உள்ள தென்னம்பாளையம் பிரிவு, ராசிபாளையம் ரோட்டில் உள்ள கன்னிமார்கோவில் எதிர்புறம் ஸ்வீட் பீடா கடை அருகே கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது .போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 26 கிலோ எடை கொண்ட 4,276 கஞ்சா சாக்லெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இதன் மதிப்பு ரூ 1லட்சத்து 71 ஆயிரம் இருக்கும். அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் மொகன்டி (வயது 25) என்பது தெரியவந்தது. இவர் பீடா கடை நடத்தி வந்ததும் அங்கு கஞ்சா சாக்லெட்டுகளை அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் ,வட மாநில தொழிலாளர்களுக்கும் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.