எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது… ராகுலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது காங்கிரஸூக்கு தெரியும் என ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று பேசினார். பேச்சின் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் பிரதமர் கடுமையாக விமர்சித்து வந்தார். இதன் காரணமாக பிரதமரின் உரையின் போது, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீண்டும் மீண்டும் இடையூறு செய்தார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை பிரதமர் மோடி கடுமையாக சாடினார். ஆதிர் ரஞ்சனுக்கு இடையிடையே குறுக்கிடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், ஏனென்றால், அவர் இந்த வயதிலும் குழந்தை பருவத்தை அனுபவிக்க விரும்புகிறார் என்று பிரதமர் கேலியாக கூறினார். பிரதமரின் கேலிக்கு, ஆளும் கட்சி உறுப்பினர்கள் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற மேஜைகளை தட்டி, சிரிப்பலை எழுப்பினர்.

முன்னதாக, பிரதமர் உரையின் தொடக்கத்தின் போது குறுக்கிட்ட ராகுலிடம், பிரதமர் மோடி ‘நீங்கள் விரும்பினால் அமர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றும், நான் உங்களுக்கு நன்றி சொல்லி உரையை தொடங்க வேண்டுமா? என்றும் கேலியாக கூறினார்.

இதேபோல், தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வரவே முடியாது என கூறிய ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பிரதமர், பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க மக்கள் அனுமதிக்கவே இல்லை எனவும் பல மாநிலங்களில் ஆட்சி கைவிட்டுப் போன பிறகும் அக்கட்சிக்கு அகங்காரம் குறையவில்லை என்றார்.

காங்கிரஸின் அறிக்கைகளும், செயல்களும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருந்து விலகி இருப்பதற்காக அவர்களே முடிவு செய்துள்ளதை போல் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வரக்கூடாது என்று நீங்கள் (காங்கிரஸ்) முடிவு செய்துள்ளதால், நானும் எனக்கான திட்டங்களை வகுத்துள்ளேன் என்றார்.

நாகாலாந்து மக்கள் 24 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸுக்கு வாக்களித்தனர். ஒடிசா மக்கள் 27 ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்கு வாக்களித்தனர். 28 ஆண்டுகளுக்கு முன்பு கோவாவில் முழுப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றீர்கள்.

1988-ல் திரிபுரா காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தது. 1972-ல் மேற்கு வங்கம். அதன்பிறகு என்ன ஆனது? தெலங்கானா மாநிலத்தை உருவாக்கியதற்காக நீங்கள் பெருமை கொள்கிறீர்கள். ஆனால், பொதுமக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் தொடர மக்கள் விரும்பவில்லை. ஒருமுறை காங்கிரஸை நிராகரித்த மாநிலங்கள் மீண்டும் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்று நாட்டில் ஏழை மக்கள் இலவச சிலிண்டர் இணைப்பு, வீடு மற்றும் கழிப்பறைகளைப் பெறுகிறார்கள். மக்களுக்கு சொந்த வங்கி கணக்கு உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, 2014-ஆம் ஆண்டிலேயே சிலரது எண்ணங்கள் சிக்கித் தவித்து வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.