நேரடி பிரச்சாரத்தை கைவிட இந்த இரண்டு காரணங்கள் தானாம்-முதல்வர் ஸ்டாலின் விளக்கம் !

மக்களைத் தேடி வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்துவந்த திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தற்போது முதல்வரான பின் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேரடி பிரச்சாரத்தை கைவிட்டு ஆன்லைன் வழியாக பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

முதல்வர் ஸ்டாலின் ஏன் நேரடி பிரச்சாரத்தை கைவிட்டு இந்த ஆன்லைன் பிரச்சாரத்தை தேர்ந்தெடுத்தார் என்பது குறித்தும் திமுகவினர் இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர்.

முதலில் ஸ்டாலின் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகத்தான் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் அருகே பிரச்சாரத்திற்கான மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. வேட்பாளர்கள் அனைவரையும் மேடையில் ஏற்றி மேடைக்கு அருகே திறந்த ஜீப்பில் நின்று முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதாக நிகழ்ச்சியில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஆனால் திடீரென்று இந்த நேரடிப் பிரச்சாரம் செய்யப்பட்டதற்கு காரணமாக கொரோனா என்று சொல்கிறார்கள். கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும் பரவல் இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருப்பதால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் தப்பிக்கவே இந்த முடிவாம்.

முதல்வர் வருகிறார் என்று மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களும் கூட்டத்தை கூட்டி வந்து விடுவார்கள். அதனால் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டலாம் என்றும், இந்த குற்றச்சாட்டுகளை தவிர்ப்பதற்காகத்தான் முதல்வர் ஆன்லைன் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் முதல்வரின் நேரடி பிரச்சாரம் என்றால், முதல்வர் வருகைக்கான கட்சியினரின் காத்திருத்தல் , பொருள் விரயம், நேர விரயம் என்று நிர்வாகிகளுக்கும் கட்சியினருக்கும் ஏற்படும் அந்த நேரத்தை தேர்தல் பணிகளில் செலவிடலாம் என்று அறிவுறுத்தி தான் ஆன்லைன் பிரச்சாரத்தை ஸ்டாலின் கையில் எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

முதல்வரின் ஆன்லைன் பிரச்சாரத்தை ஒளிபரப்பு செய்யும் விதமாக, அந்தந்த பகுதிகளில் திரைகள் அமைத்து திரைக்கு முன்னால் கூட்டத்தினை கூட்டும் வேலைகளில் மாவட்டச் செயலாளர்கள் தயாராகிவிட்டார்களாம்.