ஏழு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்… உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை.!!

ச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பே உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளை நியமனம் செய்து வருகிறது.

நீதிபதிகள் நியமன விவகாரத்தில், கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டில் உள்ள ஏழு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சீனியாரிட்டி அடிப்படையிலும் பிராந்திய மற்றும் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் கொலிஜியம் பரிந்துரை அமைந்துள்ளது.

கேரளா, ஒடிசா, மணிப்பூர், ஆந்திரப் பிரதேசம், மும்பை, தெலங்கானா மற்றும் குஜராத் ஆகிய உயர் நீதிமன்றங்களில் தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இந்தியா தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம், தலைமை நீதிபதிகளை பரிந்துரைத்துள்ளது.

குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷிஷ் ஜே. தேசாயை கேரள உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். வெங்கடநாராயண பாட்டியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை செய்திருந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக தேசாய் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எஸ். முரளிதர், வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், சுபாசிஸ் தல்பத்ராவை புதிய தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சித்தார்த் மிருதுலை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக, அந்த பதவிக்கு நீதிபதி தீரஜ் சிங் தாகூர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. இந்த சூழலில், அவரை ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மும்பை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக தேவேந்திர குமார் உபாத்யாய் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதேபோல, குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு சுனிதா அகர்வாலை புதிய தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில், தற்போதைக்கு நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தின் ஒரே பெண் தலைமை நீதிபதியாக சுனிதா அகர்வால் இருப்பார். தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அலோக் அராதேவை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.