கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகியை கைது செய்த என். ஐ. ஏ அதிகாரிகள்..!

கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகியைக் கைது செய்தது என். ஐ. ஏ

வெளிநாடுகலிருந்து சட்ட விரோதமாகப் பணப் பரிவர்த்தனை நடந்தது சம்பந்தமாகக் கோவை, மதுரை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு நிறுவனம் (என். ஐ. ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவை கரும்புக்கடை சவுகார் நகரில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ. எஸ். இஸ்மாயில் (வயது 43) வீட்டில் என். ஐ. ஏ அதிகாரிகள் என்று சோதனை நடத்தினர்.

டெல்லியிலிருந்து வந்த 15 பேர் கொண்ட அதிகாரிகள் குழு காலை 5:30 மணிக்கு இஸ்மாயில் வீட்டிற்குள் நுழைந்தனர். ஒரு மணி நேரம் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். சோதனையையொட்டி அவரது வீட்டு முன்பு 500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இந்த தகவல் வேகமாகப் பரவியதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தொழிலாளர்கள், எஸ்.டி. பி. ஐ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இஸ்மாயில் வீட்டு முன்பு திரண்டனர். அவர்கள் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

பின்னர் உக்கடம் ஆத்துப் பாலம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறியும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மறியல் போராட்டம் நடத்திய 20-க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது காவல்துறைக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனையின் முடிவில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவின் ஹார்ட் டிஸ்க்கை மட்டும் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். மேலும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் தேசியச் செயற்குழு உறுப்பினர் ஏ. எஸ். இஸ்மாயிலை கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றனர். என். ஐ. ஏ அதிகாரிகளின் இந்த திடீர் சோதனை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.