நாம் ஒரு சில கோயில்களுக்கு போகும் போது அங்கே, ‘உங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யவும்’ என்கிற வாசகத்தை படித்திருப்போம்.
அந்த வகையில், தற்போது, அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்பு ஒன்றை அறநிலையத்துறை வெளியிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களுக்குள், பக்தர்கள் செல்லும் போது கைப்பேசி எடுத்து செல்வதற்கான தடை ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இருந்தாலும், ஒரு சில இடங்களில் இதற்கான விதிமுறைகளானது சரியாக பின்பற்றப்படுவதில்லை என ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுகின்றன. கோயிலின் வளாகத்திற்குள் நின்று புகைப்படங்கள் எடுத்தல், செல்ஃபி எடுத்தல் சமூக வலைதலங்களில் போடுவதற்காக ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நடவடிக்கைகளால், கோயிலின் புனித தன்மை மற்று ஆன்மீக சூழல் பாதிக்கப்படுவதாக, சாமி கும்பிட வரும் பக்தர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.
பக்தர்களின் இந்த குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் செல்பேசியை பயன்படுத்துவதற்கு தடை செய்யும் நடவடிக்கையை கொண்டு வருமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதற்கு செவிசாய்த்த அமைச்சர் ரமேஷ், இனி பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச்செல்ல தடை விதித்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் முனைவர் டி.ஜி.வினய் விரிவான சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அந்த சுற்றறிக்கையின் படி, வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல், அனைத்து முதன்மையான திருக்கோயில்களிலும் பக்தர்கள் கைபேசியை கொண்டு செல்ல முற்றிலுமாக தடை விதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் பயன்பாட்டிற்காக கோயில் நுழைவு வாயிலிலோ அல்லது காலணி பாதுகாப்பு மையத்திற்கு அருகிலேயோ கைபேசிகளை பாதுகாப்பாக வைக்கும் லாக்கர் வசதிகளை உடனடியாக ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
ஒரு கைபேசியை பாதுகாப்பாக பெற்று ஒப்படைக்க ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும். அதற்குரிய அதிகாரப்பூர்வ ரசீதும் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த பணியை மேற்கொள்ள தேவையான பணியாளர்களும் தன்னார்வலர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கோயில் வளாகத்தில், செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கும் தகவலை பக்தர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், நுழைவு வாயிலிலும், வெளிப்பகுதிகளிலும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்று, ஒலிப்பெருக்கிகள் மூலமாகவும் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடபட்டிருக்கிறது.
கடவுள் சிலைகளின் திருவுருவங்கள், கோயில் வளாகங்கள் ஆகியவற்றை புகைப்படம் எடுப்பது, ரீல்ஸ் எடுப்பது உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தடை பொது மக்களுக்கு மட்டும் கிடையாது, விஐபிக்கள், முக்கிய நபர்கள், திரை பிரபலங்கள் என அனைவருக்கும் பொருந்தும் என அறிவுருத்தப்பட்டிருக்கிறது. மேலும், அவர்களுக்கும் ஒளிப்படம் எடுக்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே, விதிகளை மீறி அனுமதி இல்லாமல் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.









